'அவன்......அவள் கணவன் இறந்த செய்தி இடியாய் இறங்கியது.
அவள் மனதில் துளிர்த்திருந்த எதிர்கால கனவுகள் ,எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஒரு நொடியில் காணாமல் போயின.
இனி ஒன்றுமே இல்லை. அழுவதைத்தவிர.......!
'அம்மா பசிக்குது'
என மெல்லிய குரலில் விசும்பிய மூன்று வயது மகள் அனுஜாவை அணைத்தவாறே கண்ணீரில் கரைந்தாள் செல்லம்மா.
செல்லம்மா............
வறுமைப்பட்ட பெற்றோருக்கு செல்லமாகப் பிறந்த மகள்தான். இளமையிற் கொடிது வறுமை என்பார்களே...அந்த வறுமையின் வலியின் முன்னே வாழ்க்கை தோற்றுப் போனது.
சீதனம் எனும் அரக்கன் விதியின் முன்னே பண்பான அவளது நற்குணத்திற்காக வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டான் நடேசன்
பெற்றோரின் ஆசியுடன் கூலித் தொழிலாளி நடேசனுடன் வாழ்வில் இணைந்தாள். அவ் வசந்த வாழ்வின் பொக்கிஷமாக அனுஜா
கூலித் தொழிலாளி என்பதால் நீண்ட பொழுதுகள் அலைந்து திரிந்தால்தான் கொஞ்சமாவது பணம் கிடைக்கும்.
அன்றாடம் உழைக்கும் வருமானத்தில் கடன் தொல்லையில்லாத நிம்மதியான வாழ்க்கை.
அன்று ஒரு மாலைப்பொழுதில் வேலைக்குச் சென்றவன் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. துடித்தாள். அந்த இரவு கண்ணீரில் கரைந்தது.
மறுநாள்..........
அதிகாலை காவல் நிலையத்திலிருந்து கைபேசி அழைப்பு வந்தது.
விபரம் சொன்னார்கள்.
உயிருடன் சென்றவன் பிணமாகி இருந்தான்.
மரக்கிளைகளை வெட்டும்போது கால் தவறி வீழ்ந்து மரணம் அது.
அவள் கவலைக்குள் மூழ்கி விரக்தியடைந்தாள். உணர்ச்சியற்றவளாக மாறியிருந்தாள்.
யார் யாரோ எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.
ஆனாலும் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை. மகளின் வாழ்வுக்கான ஆரம்பமாக இருந்தது.வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
சிந்தனைக்கோலங்களில் சிறைப்பட்டிருந்தவளை யாரோ சுயநினைவுக்குள் இழுத்தார்கள்.
மெல்ல நிமிர்ந்தாள்.
எதிரே...........
சோகத்தின் இறுக்கத்திலும் ஆச்சரியப்பட்டு கண்கள் விரிந்தன.
'பவ்யா'
சிரிக்க முயன்றாள். சிறைப்பட்டிருந்த சோகம் வென்றது.
தன் பள்ளிக்கூட நண்பியை இத்தனை வருடங்களின் பின் சந்திப்பாளென்று கனவில்கூட அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
நண்பியின் விழிகளில் வழியும் கண்ணீர் அவளை இன்னும் உசுப்பேத்தி இருக்க வேண்டும். அழுகை வெடித்தது. தோழியை சிறு குழந்தையாய் அணைத்தாள்.
'எல்லாம் கேள்விப்பட்டேன். இனி உனக்கு யாரும் இல்லையென்று நினைக்காதே. உனக்கு நான் இருக்கிறேனடி. நம்ம அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கடி. உன்னோட வாழ்க்கை இன்னும் அழிஞ்சு போகல செல்லம்.
உன் பொண்ணுக்கு இனி இரண்டு அம்மாடி'
தன் தோழியின் கரங்களுக்குள் சிறைப்பட்டாள் செல்லம்மா.
கண்ணீர் சோகம் கலந்த ஆனந்தத்தின் கலவையாக மாறிக் கொண்டது.
அறுந்து போன அவள் வாழ்க்கை. நட்பின் துணையால் மீண்டும் தளிர்க்க ஆயத்தமாகிக் கொண்டது.
கதையாக்கம்
ஜன்ஸி கபூர்
வணக்கம்
ReplyDeleteகதையை படித்த போது கதையின் சுவையை அறிந்தேன் வாழ்த்துக்கள்
வணக்கம். தங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்வுடன் நன்றிகள்
Delete