About Me

2020/08/07

நிழல் - நவீன கவிதை

நிழல் உண்மையை உணர்த்துகின்றது/

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது/

இருளெனும் பொய்மையை மறைக்கிறது/


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்/

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது/


வண்ண பேதங்கள் இல்லையதற்கு/

எப்போதும் கருமைதான்/

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது/


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்/

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல/


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்/

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்/

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல/


பல உருக்கள் அமைத்து/

வித்தைகள் செய்கின்ற விரல்களும்/

முதலீட்டு வணிகப் பொருள்தான்/


இருளையும் ஒளியையும்/

தொடர்புபடுத்தும் நிழல்/

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற/

வாழ்க்கையை நினைவூட்டுகிறது/


பௌர்ணமி,அமாவாசைகள் கூட/

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்/

மனிதனுக்கும் தத்துவமாகின்றன/


வறுமை நிலையில் பயமுறுத்தும்/

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்/

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்/


பொய்கள் மெய்யாகலாம்/

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்/


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல/


ஜன்ஸி கபூர்-06.08.2020

யாழ்ப்பாணம்


Kesavadhas

ஜன்ஸி கபூர் கவிதை முதற் கவிதை எனக் குறிப்பிடினும் தேர்ச்சி தெரிகிறது!

முதலவரி உண்மையை உணர்த்துகின்றது

என மாற்றி

அடுத்த வரியில் தன்னையே வேண்டாம்!

அதன் பின்னர் கவிதை பேசுகிறது!

வண்ணப் பேதங்கள் இல்லா சமத்துவம்

மனிதர்கள் மனங்கள் போல சூழலுக்கு ஏற்ப மாறுகிறது!

உச்சி வெயில் பாதணிகள்

இன்ப துன்ப வாழ்க்கையை தொடர்ந்து கூடவந்து நினைவூட்டுகிறது!

பௌர்ணமி அமாவாசை உவமங்கள் அருமை!

விலைவாசியோடு ஒப்புமை அழகு!

முடிவும் நன்றே.

வாழ்த்துகள் கவிஞரே!****




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!