About Me

2020/08/05

உத்தமமே காதலின் உன்னதமே

விழிகளின் ஈர்ப்பினில் விழுமியக் காதலும்/
விழுந்ததே இதயத்தினில் இன்பமும் இசைந்திட/
அழகிய உணர்வும் உயிருடன் பிசையவே/
ஆனந்த வரமாய் என்னுள் உவந்தாயே/

காதலின் சுகம்தான் காற்றினில் நனைகையில்/
மோதியதே உன் குரலும் இசையாக/
கனவுக்குள்ளும் உதிரு முந்தன் புன்னகைக்குள்ளே/
கரைகிறதே எந்தன் வாலிப வயசும்தான்/

பெண்ணழகியே நொறுங்கினேனே உந்தன் கூர்விழியில்/
எண்ணத்திலும் பூசி நின்றேன் உன்னைத்தானே/
வண்ணமலரே மலர்கிறாயே நெஞ்சுக்குள்ளே இதமாக/
கண்டெடுத்தேன் நிலவுக்குள் பிரிந்திடாத வரமுன்னை/

அமுதச் சிற்பமே பிழிகின்றாய் மெல்லிசையே/
அழைக்கின்றாய் எந்தன் பெயரும் கற்கண்டாக/
பழகிய நொடியெல்லாம் பாசமாய் உறைந்திட/
பவளக்கொடியே பாருமே போற்றுமே உனையே/

விழிகள் நான்கும் வீழ்ந்திட்ட காதலில்தான்/
எழுந்திடுமே ஓருயிராய் அன்பும் சிறகடித்தே/
விழுதாய் பற்றிடும் உந்தன் கரங்களும்/
தழுவுதடி என்னை உத்தமக் காதலினால்/

உயிரோடு இசைந்திட்ட உன்னத காதலே/
உணர்வுக்குள் பிசைவேனே உத்தமி உனையே/
உன்னைத் தொடரும் எந்தன் நிழலுக்குள்ளும்/
உத்தமமுண்டு அது உனக்குத்தானே சொந்தமென்று/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம்




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!