About Me

2020/08/05

கவிபாடும் காந்தப்பூக்கள்

காற்றும் துளைத்திட துள்ளிடும் அலைகளெல்லாம்/
ஒற்றிடுமே மணலைத்தான் ஈரத்தையும் பிழிந்தே/
கற்றையாய் புன்னகைக் கொத்துக்கள் வதனமேற/
ஊற்றாறாய் நீந்துகின்ற நீரோடைகளாய் சிறார்களிங்கே/

வெண் மணலைக் கோர்த்தெடுக்கும் மொட்டுக்களால்/
நண்டூறும் குழிகளும் நிரம்பிடுமே குறும்புகளால்/
கண்களுக்குள் வாசப்பூக்கள் நளினத்துடன் விரிந்திடவே/
எண்ணச் சிறகின் தொடுகையில் உயிர்த்திடுமே ஆகாயம்தான்/

உருள்கின்ற சோகிகள் உதிர்க்கின்ற குறுநகையில்/
வருமே யின்பமும் நுரைக்கும் கடற்பூக்கள் பிசைந்தே/
விரும்பியே ரசித்திடலாம் மொட்டுக்களின் தாளவோட்டம்/
கரும்புச்சாற்றிலும் நனையுமிந்த அலைத் தோப்பு/

உணர்வுடன் கலக்கும் நட்பின் பேரானந்தம்/
திணறுமே ஒய்யாரக் கனவின் தித்திப்பிலே/
உணரும் உள்ளங்களும் இளமையின் சுகந்தங்களை/
கணந்தோறும் அனுபவித்திடும் வசந்தப் பேருவைகையில்/

தரை தட்டுமிந்த மனிதப் படகினில்/
கரையும்தானேது.../
கறையில்லா அன்பின் களிப்புடனே இடர்/
திரை நீக்கி மலருமிந்த
கவிபாடும் காந்தப்பூக்கள்/

ஜன்ஸி கபூர் 

  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!