About Me

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

2021/04/21

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற

கணியர் கருத்தால் காசினியும் உவக்கும்

காலம் போற்றும் வாழ்வியல் முறையினை

உணர்ந்தே ஏற்றால் வாழ்வும் சிறக்கும்


உலக மக்கள் யாவரும் ஒன்றென

உறவாய்க் கருதி உணர்வால் கலப்போம்

எல்லா ஊரும் எமக்கு ஒன்றே

ஏற்போம் மக்களை அன்பால் கவர்ந்தே


வாழ்வில் தொடரும் நன்மை தீமை

வந்தணையும் இன்பம் துன்பம் யாவுமே

வருமே ஊழால்தானே தருவாரோ பிறரும்

அறத்தின் நிழலாய் ஒழுகுவோம் உணர்வினை


இறப்பும் பிறப்பும் புதுமை நிகழ்வோ

இறைவன் சித்தம் இயற்கை வழியே

இவ்வுலக இன்பமும் துன்பமும் நீடிக்குமோ

வெறுப்பினால் உரைத்திடலாகுமோ உலகம் இனிதன்று


கார்மேகம் பிணைந்தே ஊற்றும் மழைநீர்

களிப்பினில் ஒன்றாகுமே பேராற்று நீராகி

இயற்கையின் மடியினில் இசைந்திடுமே வாழ்வும்

இன்மொழி நவின்றனரே ஆன்றோரும் முன்னர்


பெரியோரைப் பெருமையில் வியந்தே பார்த்திடலும்

எளியோர் சிறியோரை இகழ்ந்தே தூற்றலும்

தவறென்றே உணர்ந்திடுவோம் சரிநிகராக மதித்திடுவோம்

தரணிக்குள் சமத்துவம் பேணியே வாழ்ந்திடுவோம்


ஜன்ஸி கபூர் 



அன்பால் உழுவோம்

 

பசுமை போர்த்தும் பரந்த வெளியில்/
பயிரின் சிரிப்பில் விளைச்சல் செழிக்கும்/
காற்றின் அலைவில் நாற்றும் இசைக்கும்/
கானம் நெஞ்சில் மோதி இரசிக்கும்/

நெற்றி வியர்வை வீழ்த்தும் முத்துக்கள்/
நெஞ்சக் கவலைதனை அழிக்கும் சொத்துக்கள்/
விதைக்கும் உழைப்பும் விளையும் பொன்னாக/
விலகும் துன்பத்தால்  உலகும் உயிர்க்கும்/

இயற்கை அழகைச் சிதைத்திடா உழவிலே/
இதயம் பிணைப்போம் பஞ்சமும் நீங்க/
அன்னை பூமியை அணைத்தே பயிரிட்டு/
அன்பால் உழுவோம் வாழ்வும் உயரவே/    

ஜன்ஸி கபூர்

திசை மறந்த பறவைகள்

அழிகின்ற இயற்கை வடிக்கின்ற கண்ணீர்/
வழி மாற்றுமே பறவைகளின் இருப்பை/
விஞ்ஞானம் தேடும் அறிவியல் புரட்சிக்குள்/
அஞ்சிடுமே அன்றில்கள் சிறகுகளையும் அறுத்தே/

நிமிர்கின்ற கைபேசிக் கோபுர அலைகள்/
நெறிக்கின்றதே குரல்வளைப் பூக்களின முடிச்சை/
நவீனத் தேடலும் சிதைக்கின்ற சோலைகள்/
நனைந்திடும தீக்குள் உமிழ்கின்றதே வெம்மையை/

காடுகளை உடைத்துச் சாலைகளை நீட்டுகையில்/
வாடுகின்றனவே சிற்றுயிர்களும் தேடுகின்றனவே வாழ்வியலை/
நாடுகின்ற வெறுமைக்குள் மூடுகின்றதே செழிப்பும்/
கூடுகளும் உடைந்தே துடிக்கின்றனவே உயிர்கள்/

வானுயர்க் கட்டிடங்கள் வாசலினை மறைத்திட/
வாழ்வின் தடங்களும் மறைந்தே அழிகையில்/
துடிக்குமே சிறகுகள் திசைமாறிப் பறந்திட/
படித்தும் அறிவிலி மானிடர் வதையிது/

ஜன்ஸி கபூர் 

ஏன் மறந்தாய்

இணைந்தாய் அன்பில்
........இணைத்தாய் கரமதை/ 
இன்னல்கள் அகற்றியே
........இனித்தாய் மனதுள்/

நிழலாய் தொடர்ந்தாய்
.......நினைவுள் முகிழ்த்தாய்/
நிலையற்ற வாழ்விலே
......நிறைந்தாய் உணர்வுக்குள்/

வலிகள் வருகையில்
....வாசலில் உன்னுருவே/
வறுமையை விரட்டவே
.....வழியும் தந்தாயே/

உறவுகள் ஆயிரம்
......உறவாடிடும் பொழுதிலே/
உணர்கின்றேன் உன்னையே
.......உயர்ந்த நட்பாய்/

அழைக்கின்ற பொழுதெல்லாம்
......அணைத்திடுவாய் சிரிப்போடு/
அவலங்கள் சிதைக்கையில்
.......அழித்திடுவாய் அனைத்தையும்/

அறுசுவைத் தித்திப்பின்
.......அடையாளம் நீயன்றோ/
அடைகின்ற பெருமையெலாம்
.......அகமகிழ்ந்தே ரசித்தாயே/

கருத்தினில் நிறைந்தே
.....கனவுக்குள்ளும் உருவானாய்/
கடைசிவரையிலும் தொடர்வாயென்றே
......களித்தேன் எனக்குள்ளே/
கரைந்தாயோ விதியினில்
.......கண்ணீரில் நானடி/
கல்லறைக்குள் உறங்கிடவோ
.......கண்வளர்ந்தாய் மறந்தென்னை

ஜன்ஸி கபூர்

கழுகுக் கூட்டம்

 

அண்டத்தையே அடைமானம் வைக்கும் பேராசை/
கொண்டவ னெல்லாம் அடிக்கிறான் கொள்ளை/
திண் பண்டங்களில் பெருங் கலப்படம்/
தண்டனைக்கும் பயமில்லாத் தந்திரக் கூட்டம்/

தொற்றுக் காலமும் பற்றே பணத்தில்/
பெற்ற மகள்மீதும் வன்புணர்வுக் காமம்/
பெண்மையும் முதலீடோ பொல்லா மாந்தருக்கே/
மாண்பற்றவர் மாசேற்றும் கலிகாலம் தானேயிது/ 
 
வேட்டையாடும் ஊழல் நாட்டுக்கே கேடு/
நீட்டிடும் இலஞ்சம் வாட்டுதே வறுமைக்குள்/
கேட்டின் வழியாய் வட்டமிடும் கழுகுக்களைத்/
தட்டிக் கேட்டாலோ வடுக்களே தொடுகின்றது/

வஞ்சக மனதில் வடிந்திடும் கபடம்/
கொஞ்சுதே கண்ணீரை கொடுமைகளும் நீளுதே/
அஞ்சுதே மனிதம் ஆளுதே பணமும்/
பஞ்சாய்ப் பறக்குதே நலங்களும் வாழ்விலே/

ஜன்ஸி கபூர்  

வலி தீர்க்கும் வழி

என்றோ கற்ற கலை யின்று/
எனைத் தாங்குகின்ற உழைப்பின் ஆதாரமாக/
எழுகின்ற வலிதனைத் துரத்திடச் சுழற்றுகின்றேன்/
என் பிழைப்புக்கும் எதிர்காலம் இதுவன்றோ/

நீளுகின்ற ஊரடங்கும் முறித்த உழைப்பினை/
நிமிர்த்துகின்றதே தையலும் நிம்மதி குடும்பத்திற்கே/
கிடைக்கின்ற வாய்ப்புக்கள் விடையாகும் துன்பத்திற்கே/
தடையின்றி உழைக்கின்றேன் வாழ்வும் வளமாக/

வருத்துகின்ற நோயின் வதையிலிருந்து நீக்கும்/
வனப்பூட்டுகின்ற முகக்கவசங்களே வணிகத்தின் வெற்றி/
தளரா நெஞ்சுடன் தன்னம்பிக்கைத் துணையுடன்/
தயாரிக்கின்றேன் நானும் பாதுகாப்புக் கவசங்களை/  

ஜன்ஸி கபூர் - 23.10.2020

உன் விழிகளால் மொழி பேசு

மனசு மெல்ல உதிர்கின்றது
உன்றன் காந்தப் பார்வையில்!

நீயென்ற ஒற்றைச் சொல்லுக்குள்
நானடங்கிப் போகின்றேன்!

என் தனிமை 
இப்போதெல்லாம் உன்னால்
நிரம்புகின்றது!

வெறுமைக்குள் அலைகின்ற உயிருக்குள்
பதிக்கின்றாய்
உன்றன் பாதச் சுவட்டினை!

உன் அன்பான வம்பில்
இரகசியமாக நாணமல்லவா தெறித்துச் செல்கின்றது
 சுகமாக!

காதலும் மோதலுமாக நகரும்
நம்
அன்பில் உயிர்பெறுகிறது ஊடல்!

எனை நீயும் 
நினைவுகள் உயிர்ப்பிக்கையில்
காத்திருக்கின்றேன் கனவுகளுடன்!

காற்றின் துளைகளுக்குள் 
நிரம்பியிருக்கின்ற உன்னையே
இப்போது
சுவாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன்!

அடடா...
வெட்கப்படும் உன் புன்னகையை
ரசிக்கின்றேன் இரகசியமாக!

உன் நினைவுக்குள் தரித்திருக்கும்
என்றன் உணர்வுதனை உயிர்ப்பூட்ட 
தினமும் நீயும்
உன் விழிகளால் மொழி பேசு!

 ஜன்ஸி கபூர்   

கூடு ஒன்று காத்திருக்குது

 


நவீனத்  தேடல் உதிர்க்கும் தொழினுட்பம் 

நாடித்துடிப்பை அறுக்கின்றதே உயிர்க்கும் விருட்சங்களில் 

பட்டுப்போன கிளைதனில் மொட்டென விரிந்திருக்கின்ற 

சிட்டின் இல்லம் பாசத் தொட்டிலே 


பசுமை போர்த்தும் மரங்களை வீழ்த்தி 

பகையாய்ப் புகைகின்றதே மனித வுயிர்கள் 

குறைந்த விளைச்சல் மறைக்கும் உணவும் 

நிறைக்கின்றதே வதையைப் பறக்கின்றதே குருவிகள் 


பற்றே  இன்றித் துடிக்கின்ற சிட்டுக்கள் 

படர்கின்ற இந்தத் தனிமைச் சோலையும் 

மாந்தர்க் குறுக்கீட்டால் சிதையுதே வனப்பிழந்து 

மாண்பான இருப்பும் தொலைகின்றதே வெறுமைக்குள் 


கூடு ஒன்றும் காத்திருக்குது அழகாக 

கூடிக் குலவ எதிர்பார்த்தே துடிக்கின்றது 

பற்றி நிற்கும் கம்புத் தூண்கள் 

காற்றின் சுழற்சிக்குள் உடைந்திடாத அணைப்புக்கள் 


ஜன்ஸி கபூர்   

காலமும் கவிதை எழுதும்

நரைக் கோடுகள் கிழிக்கும் சிரசு

முதுமைத் திரைக்குள் மூச்சடங்கும் தேகம்

சுருக்கத் தளர்வில் முணங்கும் மூச்சு

உருவங்களை மறைத்திடும் கதிராளிப் பூ

பருவங் கடந்த தோற்றத்தின் முத்திரையாய்

முகங்காட்டி நிற்கின்றேன் உலகில்


இருந்தும் முதுமை மனதுக்கல்லவே

வாலிபத்தின் வனப்பினை எனக்குள் உணர்கின்றேன்

உணர்வின் வடிகாலாக வழிகின்றன கவிகள்

படைத்திடும் படைப்புக்கும் முதுமையுண்டோ

உடைந்தோடுகின்ற இரசிப்பில் தினமும் மூழ்கின்றேன்


சில மணிநேரங்கள் தனிமையின் இம்சிப்பில்

கலகலக்கின்ற நினைவுகள் கருவாகி

நிரப்புகின்றன வெள்ளைத் தாள்களில் தம்மை

உறவுகள் உதிர்க்கின்ற கண்டு கொள்ளாமை

உறவாடுகின்றன என்னுள்

எனக்காக நான் வாழ்வதில் ஆத்ம திருப்தி


என் வழிப்பாதையில் கிடக்கின்ற இலக்கியங்களைக் 

கண்டெடுத்துச் சுவைக்கின்றேன்

இப்பொழுதெல்லாம்

தனிமை என்னைத் தோடாமல் தொடாமல்

எங்கோ விலகிச் செல்கின்றது


வயதின் சடுதி ஏற்றத்தில்

வனப்பழிந்து தள்ளாடுகின்றன கால்கள் நிதமும்

சுவையற்ற நாவுக்குள் இசைகின்ற காற்றும்

தடுமாறியே வீழ்த்துகின்றது சொற்களை

இருந்தும் உடைந்து விடவில்லை நானும்

உணர்வின் ஊட்டத்தை வரிகளாக்கி

பா இசைக்கின்றேன் தென்றலுக்குள் குரலிணைத்து


சூழ்ந்திருப்போர் விரல் எண்ணுகின்றனர்

ஆழ் துயிலுக்குள் நனைந்திடும் நாட்களுக்காக

நானோ ஆறாம் விரலாக ஏந்துகின்றேன்

பேனாவை.......

உள்ளத்தில் குமுறும் என் உணர்வினைப்

பிழிந்தூற்றிப் படைப்பினை உருவேற்ற.....


பரிகசிக்கின்றனர்

கிழமெனும் உருவுக்குள்

கிளர்ந்தெழும் செந்தமிழின் வேட்கையை

உணராதவர்களாக


அனுபவத்தையும் ஆற்றலையும் சிந்தைக்குள் பதித்தே

எழுத்துக்களால்

அடையாளப்படுத்துகின்றேன் என்னையே

இளமைத் துடிப்பினை இன்னும் விட்டுக் கொடுக்காதவனாக

சந்தி வழிச் சந்ததிகளின்

சிந்தனைக்குள் என்னை ஊற்றுகின்றேன்

அடையாளப்படுத்துகின்றேன் என்னை அடுத்தவர் முன்னிலையில்


வனப்பினைத் தேடுகின்ற

புறத் தோற்றத்தினுள் அகப்படாதவனாக நான்

இருந்தும்

எழுத்துக்களாக எழுகின்ற என்னை

மறந்து விடாத கலைகளின் மடி

எனைத் தழுவும் வரை விழாமல் எழுவேன்

வரிகளாக மாறிக் கொண்டிருப்பேன்

அரிக்கின்ற கறையான்களுக்குள் ஆவியடங்கிப் போனாலும்

வரிகளால் வாழ்ந்து கொண்டிருப்பேன்

எனக்காக காலமும் கவிதை எழுதும்


கனல் கவி ஜன்ஸி கபூர்  

யாதும் ஊரே யாவரும் கேளிர்


யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற

கணியர் கருத்தால் காசினியும் உவக்கும்

காலம் போற்றும் வாழ்வியல் முறையினை

உணர்ந்தே ஏற்றால் வாழ்வும் சிறக்கும்


உலக மக்கள் யாவரும் ஒன்றென

உறவாய்க் கருதி உணர்வால் கலப்போம்

எல்லா ஊரும் எமக்கு ஒன்றே

ஏற்போம் மக்களை அன்பால் கவர்ந்தே


வாழ்வில் தொடரும் நன்மை தீமை

வந்தணையும் இன்பம் துன்பம் யாவுமே

வருமே ஊழால்தானே தருவாரோ பிறரும்

அறத்தின் நிழலாய் ஒழுகுவோம் உணர்வினை


இறப்பும் பிறப்பும் புதுமை நிகழ்வோ

இறைவன் சித்தம் இயற்கை வழியே

இவ்வுலக இன்பமும் துன்பமும் நீடிக்குமோ

வெறுப்பினால் உரைத்திடலாகுமோ உலகம் இனிதன்று


கார்மேகம் பிணைந்தே ஊற்றும் மழைநீர்

களிப்பினில் ஒன்றாகுமே பேராற்று நீராகி

இயற்கையின் மடியினில் இசைந்திடுமே வாழ்வும்

இன்மொழி நவின்றனரே ஆன்றோரும் முன்னர்


பெரியோரைப் பெருமையில் வியந்தே பார்த்திடலும்

எளியோர் சிறியோரை இகழ்ந்தே தூற்றலும்

தவறென்றே உணர்ந்திடுவோம் சரிநிகராக மதித்திடுவோம்

தரணிக்குள் சமத்துவம் பேணியே வாழ்ந்திடுவோம்


ஜன்ஸி கபூர் - 28.10.2020



சிறுகோட்டுப் பெரும்பழம்

 

இயற்கை இசைவின் இதயக் காதல்/

இனிமையின் பொழிப்புரையாம் குறிஞ்சித் திணையில்/

காமச் சுவையும் கருவாகிப் பிறந்திட/

காவிய வரிகளும் உயிர்த்திடும் மனக்கண்ணில்/


இரவும் பிழிந்திடும் தனிமைச் சாரலில்/

உறவாகிக் களித்தன காதல் மலர்கள்/

உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகத்துள்/

புணர்ந்தன அன்பின் இதயங்கள் தமக்குள்/ 


புத்தியில் விதையாகி தடுமாற்றும் காமத்தின்/

சொத்தெனக் கனிந்ததே காதலர் நெஞ்சும்/

நித்திரைக்குள் உறைந்திடா விழிகளின் ஏக்கத்தில்/

முத்துப் புன்னகையும் வாட்டத்தில் சுருங்க/


இம்சையையும் இரசித்திடும் பருவத்தின் ஈர்ப்பில்/

இதயமும் தொலைந்திடத் தலைவனும் தலைவியும்/

கூடியே களித்துப் பிரிந்திடும் வேளையில்/

தேடியே வந்திட்டாள் தலைவியின் தோழி/


சந்தித்தாள் தலைவனை செப்பினாள் தன்னுரையை/

சிந்தனைச் சுழியினில் சுழல்காற்றாய்த் தலைவனும்/

வேரும் சுமந்திடும் வேர்ப்பலாச் செறிந்திடும்/

பெரும் மலையினில் வாசம் செய்பவனே/


மூங்கில் வேலியினில் முக்காடிடும் பலாவைத்/

தாங்கிடுமே உம்மூரும் பலாவினைக் காத்தே/

பொங்கிடும் உம் காதலும் அவ்வாறன்றோ/

பங்கமின்றி தங்கமாக மின்னுமே உமக்குள்/


அலரும் பரந்திடாது பழிச்சொல்லும் உரையார்/

மலருமே உம்மில் நினைவுகளும் பாதுகாப்பாக/

தலைவியின் காதலோ சிதைந்திடும் வலியில்/

அலைந்திடும் பழிச்சொல்லும் விழிநீராகி வீழ்ந்திடுமே/


சிறிய கிளையில் தொங்கிடும் கனியவள்/

அறுந்து வீழ்ந்திடுவாள் உயிரும் வருந்திட/

பாதுகாப்பில்லா அவள் காதலும் முறிந்திடின்/

பறிபோகுமே உயிரும் அக்கணமே வெந்து/


அறிந்திடார் அடுத்தவரும் பெண்ணவள் மெய்க்காதலை/

அனலும் மொய்த்திடும் அச்சத்தின் உச்சத்தில்/

மனதினை அறிந்திட்ட நீயே விரைவினில்/

கனவும் மெய்ப்பட கரம்பிடித்திடு விரைவினில்/


என்றுரைத்தாளே தோழியும் தலைவியின் குறிப்பறிந்து/

இனித்திடும் பலாவின் முதிர்ச்சிக் காதலும்/

இதயத்தின் வெளியினில் இன்பத்தைக் குலைத்திடும்/

ஈருயிரை இணைத்திடும் ஆருயிர்ப் பிணைப்பினில்/


ஜன்ஸி கபூர் - 7.10.2020

 

Kesavadhas

ஜன்ஸி கபூர் இலக்கியக் கவிதையமைப்பில் படிமங்கள் பளிச்சிட

இனிய தமிழில் வனையப்பட்ட கவிதைப் புனைவு இஃது!

இந்த சொல்லாட்சிப் படிமங்கள் மலைக்க வைக்கின்றன!

இனிமையின் பொழிப்புரை

இரவும் பிழிந்திடும் தனிமைச் சாரலில்

உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகம்

புணர்ந்தன அன்பின் இதயங்கள் தமக்குள்

நித்திரைக்குள் உறைந்திடா விழிகளின் ஏக்கம்

இம்சையை இரசித்திடும் பருவத்தின் ஈர்ப்பு

அனுபவப் பட்டவர்க்கே ஆனந்தம் தெரியும் ஆனால் அதற்குமொரு கவித்துவம் வேண்டும்!

அலைந்திடும் பழிச்சொலும் விழிநீராகி வீழ்ந்திடுமே!

அனலும் மொய்த்திடும் அச்சத்தின் உச்சத்தில்..

ஈ மொய்க்கும் தீ மொய்க்குமா?

அபரிமித கற்பனை!

வென்றும் வாழுமே முதிர்ச்சிக் காதல்!

கவிதை சிறப்பு!

வாழ்த்துகள்!

2021/04/14

வல்வரவு வாழ்வார்க்கு உரை

 

 

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை (1151)

இன்பநலன் நுகர்ந்திடும் காதல் மணத்தில்/

இதமற்ற பிரிவும் பெருந் துன்பமே/

இன்னுயிர் வருத்திடும் பிரிவின் வலிதனை/

உணர்த்துதே பிரிவாற்றாமை அதிகாரச் சுவை/


இல்லறச் செழுமையில் வருங்காலம் வனப்புற/

தலைவனின் சிந்தைக்குள் உயிர்க்கின்றதே பொருளீட்டல்/

தேடல்ச் சிந்தனை தோழியூடாக உரைத்தால்/

தெரிந்திடுவாளே தலைவியுமதை தாக்கமில்லாச் செய்தியாய்/


வாழ்விற்கே காப்பாம் வளமான துணையே/

நிழலென நீண்டிட வேண்டுமே எதிர்காலத்தினில்/

உணர்வுகளைப் பொருத்திய உடல்கள் பிரிதல்/

உத்தம கற்பின் நியதியோ இவ்வையகத்தில்/


அறிந்திட்டாள் தலைவியும் அணைத்தாள் அக்கினியை/

பிரிந்திடேன் என்றவரே துன்பத்துள் தள்ளுகின்றார்/

பிரியமே நீங்கிடாதே நானும் இறக்கும்வரை/

பிரிந்துப் போகாமை உண்டென்றால் சொல்/


மாறாக விரைந்து வருவேன் என்றுரைத்தால்/

உரைத்திடு அடுத்தாரிடம் உன் வருகையை/

நானோ அறியேன் உன் வாசனையை/

உறைந்திருப்பேன் மரணத்துள் என்னுயிரும் மெலிந்திருக்கும்/


ஜன்ஸி கபூர் - 15.10.2020


 
 
  


 

கூடலிற் தோன்றிய உப்பு

விழியின் மொழியோ விளைந்திடும் காதல்/
வீழ்த்திடும் அன்பும் மொழிந்திடும் காமம்/ 
விடிந்திடா இரவுகள் நீள்கின்றதே இன்பத்தில்/
விளைகின்ற வியர்வையும் பிணைகின்றதே நுதலில்/

அணைக்கும் கரங்கள் மீட்டுகின்ற தேகங்கள்/
அடங்கிடுமோ காதலும் மொழிகின்ற சுகத்தில்/
புலவியின் பயனாய் பொங்கும் கலவி/
புளாங்கிதமே மேனிக்கு புத்துணர்ச்சியும் உணர்வுகளுக்கே/

செய்யாத தவற்றின் தவிப்பும் படரும்/
செல்ல ஊடலோ கூடலின் வழியோ/
பிரியத் தலைவனும் மொழிகின்றான் பிரிவிற்கே/
பிரிந்திடாக் காதலில் இணங்கி வாழ்வதற்கே/ 

உப்பும் விளைந்திட பூக்கட்டும் வியர்வை/
உச்ச இன்பமும் சுவைத்திடலாம் ஊடலில்/
உன் னுறவுக்குள் ஊறலைத் தூவடி அன்பே/
ஊட்டம் பெறுவோம் அன்புநிலையும் உயிர்த்திட/

ஜன்ஸி கபூர் - 29.10.2020



வீடு அடையா வெளி

 


மனதின் வலியும் வரைகின்ற கோடுகள்
வரைபடமாகித் தாங்கி நிற்கின்றதே மனையை
எனக்குள்ளும் இனிய கனவுத் தேடல்
நீண்டு தொடுகின்றது இன்னும் முடிவிலியில்

யுத்தம் சிதைக்கின்ற வீட்டின் எச்சங்கள்
துரத்திக் கொண்டிருக்கின்றன வேறொரு இருப்பிடத்திற்கு
ஓவ்வொரு ஆண்டுகளும் ஒவ்வொரு வீடாய்
அவலங்களையும் இடமாற்றிப் பழகிக் கொண்டிருக்கின்றேன்

இருந்தும் சொந்த வீட்டிற்கான ஏக்கம்
இன்னும் புகைக்கின்றது அடங்காப் பெருமூச்சுக்களை
இந்த வருடத்திற்குள் வாழ்வதற்கான வீடொன்றென்ற
ஆசைகளின் உதிர்ப்பில் கருகுகின்றதே எதிர்பார்ப்பும்

வறுமையின் உச்சம் வழிகாட்ட மறுக்கின்றதே
இருந்தும் முயல்கின்றேன் சிதைவுகளை மீள்வுருவேற்ற
வீடு அமைத்திடத் துடிக்கின்ற கனவுகளை
மீள உருத்துலக்கிப் புனரமைக்கின்றேன் மெல்ல
சேமிப்பு என்னவோ நிறைக்கின்றது பெருமூச்சுக்களைத்தானே

அவலங்களின் உழைப்பால் சிந்தியவை கொஞ்சம்
மஞ்சாடிப் பவுண்களால் கைகளில் கிடைத்தவை
கெஞ்சி வாங்கிய கடன்களின் கருணை
பணத்திற்கான வடிகால்களாகின என் தேடலில்

அவிழ்க்கின்றேன் கனவினை எழுகின்றது அடித்தளம்
ஆசைகளைத் தெளித்து கற்களை அடுக்குகின்றேன்
உணர்வுகளின் துடிப்பினைச் சுமந்தவாறே நிமிர்கின்றது
அரை குறைகளுடன் கட்டிடச் சுவர்கள்
வெற்றுக் கைகள் முடிவுறுத்துகின்றனவோ கனவினை

முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தூண்கள்
முகவரிகளாகி முணுமுணுக்கின்றன சதைகளற்ற எலும்புக்கூடுகளாகி
கற்பனைகளுடன் பிசைகின்ற கனவு வீடு
வெறும் சொற்களாகிச் சிரிக்கின்றதே வரைபடத்தில்

வெயிற் பூக்களும் வெண்மதியும் நிறைவாக
மலர்கின்ற எழில் சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும்
காற்றின் விரல்களை இதமாகத் தடவுகின்ற
சாளரங்களையும் அமைத்திட ஆசைதனைக் கொண்டேன்

இயற்கைச் சுகத்தினை அறுத்திடாத ஆர்வம்
இறுக்கிப் பிடிக்கின்றது கூரைத் தெரிவில்
வெற்றாசைகள் தாங்குமோ காசின் எடைக்கே

கூரைக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன
கட்டியெழுப்பப்பட்ட பாதிச் சுவர்களைத் தாங்கியவாறு
குட்டித் தூண்கள் குற்றுயிர்களாகிக் கிடக்கின்றன
கட்டி முடிக்கப்படாத வீடும் அழுகின்றதே

கொட்டும் மழையும் நனைக்கின்ற போதெல்லாம்
வெட்டி விட முளைக்கின்ற பற்றைகள்
தொட்டுக் காட்டுகின்றதே பூச்சில்லாத தரையினை

உரிய பரிமாணச் செதுக்கல்களைத் தாங்கியவாறு
உருவாக்கப்பட்ட பெரிய அறைகள் இரண்டும்
பளிங்குகள் பதிக்கப்பட்ட விசாலத் தரையும்
அடக்கமான அழகிய குட்டிச் சமையலறை

வித விதமான வண்ணங்களைத் தாங்கியவாறு
உயிர்க்கின்ற எனக்கான இருப்பிட இல்லம்
வாய்த்துவிடக் கூடியதுதானோ வீடடையும் பேறு
இன்னும் முற்றுப்பெறாத வாழிடக் கூட்டினை
முழுமையாக நிறைக்கின்றன பெருமூச்சுக்களும் வறுமையும்

ஜன்ஸி கபூர் - 22.10.2020

கன்னமிரண்டும் கிள்ளாதே


விழிகள் நான்கும் பேசுகின்ற அன்பிலே/
விழுகின்றேனே நானும் உன்றன் மனதுள்/ 
விரல்கள் பேசிடும் மொழியில் மெல்ல/
விரிகின்றதே நாணமும் நனைகிறேன் நானுமே/
 
சொருகுகின்றாய் காந்தப் புன்னகையை நெஞ்சில்/
சொக்கி நிற்கின்றேனே நினைவுகளை வருடியே/
செதுக்குகிறேன் சொந்தமாக உன்னையே என்னில்/
சோகத்தை உதிர்க்கின்ற சுகமும் நீதானே/

கன்னமிரண்டும் கிள்ளாதே சிலிர்க்குதே உயிருமே/
கன்னியென்னை மூடுகின்றாய் உன்றன் நிழலாலே/
 
 ஜன்ஸி கபூர் - 25.10.2020

கடும் புனல்

 





 
ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்
கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்
தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே
தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன

நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை
மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்.
எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்
திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது.

வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு
தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது 
பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில் 
நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்

காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்
ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது
எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற
பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது

எங்கோ நாயின் ஊளைச் சப்தம்
நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்
 
கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா
நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்
நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை

உள்ளே மெல்லிய காற்று நுழைந்து
மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது
பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது
இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்
அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை
பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை

இருள் தன்னை மறைப்பதாக இல்லை
எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை
இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை
இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி
மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்
இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது

விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்
ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது
பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை

பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை
வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்
வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்
தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன

ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை
இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி

ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற
எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்
புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது

மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்
எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி
உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது

ஜன்ஸி கபூர் - 17.10.2020'

 

நெல்லியும் உதிரும் கனிகளும்

யுத்தம் துப்பிய உதிரத்தின் சாயலில்

செம்மண் பரப்பிய கொல்லைப் புறம்

அங்கே காற்றை விரட்டிக் கொண்டிருந்தது

அகன்ற கிளைகளைக் கொண்ட வேம்பு

அசையும் இலைகள் குவிக்கின்ற நிழலுக்குள்

ஒடுங்கி நிற்கின்றது ஒற்றை நெல்லி


எல்லைச் சுவரை முட்டும் கொப்புக்களில்

உராய்வுக் கீறல்கள் எம் இரணங்களாய்

கொப்புக்களை உதைக்கின்ற கொத்துப் பூக்களும்

கொழுத்த குண்டுப் பழங்களின் அழகும்


கண்களை ஈர்த்து கைகளை உயர்த்துகின்றன

பழங்களின் சுவையில் நாவும் இனிக்கின்றதே

பழச்சுமையில் பாதி சாய்ந்து இருக்கின்ற

மரத்தினை தினமும் பார்க்கின்றேன் விருப்போடு


கனி உதிர்க்குமந்த சிறு நெல்லியில்

உப்பும் ஊற்றி காயைச் சுவைக்கையில்

அருகில் இருப்போர் உமிழ்நீர் சுரக்கின்றனர்.

சில பழங்கள் சீனிப் பாகினுள்

நாவுக்குள் தேனும் ஊறுகின்றது சுவையுடன்


தெருவோரம் எட்டிப் பார்க்கும் கொப்பெல்லாம்

கல்லெறிக் காயத்தினால் சிவந்திருக்கின்றன

ஒவ்வொன்றாய் பொறுக்கி பாதுகாக்கின்றேன் எனக்குள்

உதிரும் வலிக்குள் எனையே பொருத்துகின்றேன்


யுத்தத்தின் சத்தம் செவியைக் கிழிக்கின்றது

அந்நேரம் கொப்பும் தகரத்தில் உரசுகின்றது

எழுகின்ற சப்தத்தில் கலக்கின்றது அவலம்

வருந்தும் மனதின் பிம்பமாக நெல்லியும்

தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது பதற்றத்தில்


நெல்லியின் நீளமான நிழலில் பதிக்கும்

என் தடங்களுக்குள் கொட்டுகின்றேன் துன்பத்தை

மரணத்தைப் பற்றியதான பேசுபொருள் அது

அணைத்த உறவுகளின் சிதைவுப் பிழம்புகள்

என் விழிநீராலும் அணைக்காத சுவாலையாய்

எரிந்து கொண்டிருக்கின்றது வெயிலின் இம்சைபோல்


விண்ணை உடைக்கின்றதோ இயந்திரப் பறவை

இரும்புச் சிறகுகளின் உரப்பான அதிர்வில்

தேகம் மட்டுமல்ல நெல்லியும் உதிர்க்கின்றன

முதுமைக்குள் போராடும் சில இலைகளை

தரைக்குள் மொய்க்கின்ற சருகுகளின் ஆக்கிரமிப்பும்

விமானத்தின் உறுமலில் சிதறி ஓடுகின்றன


விண்ணையும் மண்ணையும் பொசுக்குகின்ற தீப்பிழம்பும்

என்னில் அச்சத்தை விதைக்கவில்லை மாறாக

இறப்பையும் புறந்தள்ளி சுவைக்கின்றேன் கனியை

உறவாகித் தழுவுகின்றது வேப்பக் காற்றும்

துரத்துகின்றேன் வெயிலையும் எனைப் போர்த்தாமல்


வட்டமிடுகின்ற இயந்திரத் தும்பியும் பொம்பரும்

சகடையும் உரசுகின்றன ஒலியை உமிழ்ந்து

செவிப்பறையின் கிழிசலில் உயிரும் அலறுகின்றதே

அக்கணத்தில் தொலைத்த நிம்மதியைத் தேடுகின்றேன்


ஆன்மாவின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நிரம்புகின்ற

வலி இறுக்கிப் பிடிக்கின்றதே மேனியை

தசாப்தங்களைக் காலங்கள் புரட்டுகின்றன விரைவாக

அடையாளப்படுத்துகின்றன அடுத்த ஊர்கள் அகதிகளென

கழிகின்ற ஒவ்வொரு விநாடியும் கலியே

களிப்பினைத் தொலைக்கின்ற அந்தக் கணங்கள்

ஆயுள் வரை நீட்டுகின்றதே அக்கினியை


மின்சாரமும் மறந்து விட்டதே ஒளியூட்ட

குப்பி விளக்கின் தொடுகையிலும் சிரிக்கின்றதே

பவளமாக மின்னும் கற்றைக் கனிகளும்

காற்றை நனைக்கும் வேம்பின் இலைகளும்


தினமும் நெல்லிக்கனியில் தினக்குறிப்பு எழுதுகின்ற

என்னுள் விரக்தி நலம் விசாரிக்கின்றது

மூச்சேந்தும் ஒவ்வொரு நொடியும் தெளிக்கப்படுகின்ற

மரண அவஸ்தையினை நுகர்ந்தவாறே வாழ்கின்றேன்


என் சுவாசப் பாதையை நிரப்புகின்றது

நெல்லியின் சுவைக்குள் நனைந்த காற்று

அவ்வையும் சுவைத்த நெல்லி யன்றோ

என்றன் உயிரையும் சேதமின்றிக் காக்கின்றது

இன்றுவரை உணர்வுக்குள் விருட்சமாகின்றது அழிவின்றி

ஜன்ஸி கபூர்  09.10.2020

தூங்காதே தம்பி தூங்காதே

 

தூங்காதே தம்பி தூங்காதே நீயும்/
சோர்வினில் துன்பம் வாங்காதே வீணாய்/
சரித்திரத்தில் பதிவாகும் உன் பெயரெல்லாம்/
தரித்திரமாக மாறிப் போகுமடா தம்பி/

உன் குறட்டையால் அருகிருப்போர் உறக்கமிழப்பார்/
உறங்காத விழிகளின் சாபத்திலே நீயும்/
சுகமிழப்பாய் வீழ்த்திடுவாரே உன்னையும் கேலிக்குள்ளே/ 
சும்மா நீயும் தூங்காதே தம்பி/

வேலைத் தளத்திலே நீயும் உறங்கும்போது/
தொழிலை இழப்பாய் வறுமையும் தழுவும்/
போரினில் தூங்கினாலோ தேசம் பறிபோகும்/
பள்ளியிலே தூங்கினாலோ புள்ளிகள் இழப்பாய்/
 
விற்பனையில் தூங்கியவன் சொத்து இழந்தான்/
மேடையினில் உறங்கியவன் பேச்சும் இழந்தான்/
கடமையில் தூங்கியவன் தொழிலும் துறந்தான்/
தூக்கத்தை நேசிப்பவன் துக்கத்தில் விழுந்தான்/

உன்தன் தூக்கத்தால் பலமிழப்பாய் தினமும்/
நீண்ட உறக்கத்தில் கண்டிடுவாய் நோய்தனை/
கண்ட கண்ட நேரத் தூக்கத்தினாலே/
உன்றன் புகழும் பறிபோகுமே கண்முன்னாலே/

நீ விரும்பும் இந்தத் தூக்கத்தினால்/
உனைச் சாரந்தோரெல்லாம் பாவம் அப்பா/
தூங்காதே தம்பி இனித் தூங்காதே/
தூங்கிய பின்னர் தேம்பி அழாதே/

ஜன்ஸி கபூர்  - 11.10.2020



நெஞ்சு அலையுதடி

 

நெஞ்சுக்குள்ள அலையுதடி உன்னோட நினைப்புத்தான்/
கரும்பும் ஒளிக்குதடி உதட்டின் மொழிக்குள்ள/
கடலும் சுருளுதடி சின்ன விழிகளுக்குள்ள/
மனசும் துடிக்குதடி உன்னோட வாழந்திடவே/

காற்றிலே கரைக்கிறே வாசத்தை தினமும்/
காதலை ஊத்துறீயே தவிக்கிற உணர்வுக்குள்ளே/
மோதுறீயே விழியாலே வீழ்கிறேன்டி வலியின்றி/
தங்கச் சிற்பமே தழுவடி உயிர்ப்பேனடி/

கொட்டுற மழைக்குள்ள நனைகிறேன்டி நானும்/
வெட்டுற மின்னலாப் பூக்குறே அருகாக/
என்னைத் தொட்டுக்கொள்ளடி விரலும் வெட்கப்பட/
பனியைத் தூவுறீயே இரவும் குளிருதடி/

உன்னோட பாசம் மிதக்குதடி நிழலா/
விண்ணுக்கும் கேட்குதடி உன்பெயர் நிலவா/
ஆசைகளைப் பேசுகின்ற கனவுக்கும் தூக்கமில்லை/
அனலுக்குள்ள எரிகிறேன்டி தழுவடி பூந்தென்றலே/ 

ஜன்ஸி கபூர் - 9.11.2020
 

பச்சைப் பசுங்கிளி வாராய் வாராய்

 

 

தாவரச் சாற்றினில் வார்த்தெடுத்த எழில்/
சோளக்கதிர் மேனியும் அதில் பொருத்திய/
கருமுத்துக் கண்களும் நெட்டிலை வாலும்/
கண்களைக் கவருதே களிப்பினில் உளமாட/

காற்றை உதைத்தே சிறகை உயர்த்துகையில்/
மோதுகின்ற ஓளியும் தீண்டுவதில்லையோ மேனிதனை/
செம்மிளகாய்ப் பழத்தைக் கொத்துகையில் சிதைந்ததுவோ/
சிவப்பும் உன்றன் அலகை நிரப்பி/

நீள்வானில் கரைகின்ற வண்ணங்கள் ஏழும்/
வளையமாகி வீழ்கின்றதோ வட்டக் கழுத்தினில்/
கொலுசும் கொழுவியதோ உன் குரலுக்குள்/
வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளிக்குள் பறக்கையில்/

ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும்/
உணர்வுக்குள் உனையேற்றி கற்பனைக்குள் உருவேற்றுகையில் /
உலகமதைச் சுற்றுகின்றாய் உளங்களில் மகிழ்வேற்றி/
பணத்தோடு புகழும் சேர்த்திடும் உறவாகின்றாய்/

குறவன் கரமதில் குவிக்கின்றாய் பணமதை/
சொன்னதைச் சொல்லும் நற்கிளியே நீயும் /
இலவு காத்த கிளியென்றாகி எமக்குள்/
அனுபவங்கள் துளிர்த்திட தடமும் பதிக்கின்றாய்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020

 ---------------------------------------------------------------
இராஜபுத்திரன் கவிதைகள்
----------------------------------------------------------------
ஜன்ஸி கபூர்
முதற்கண் வணக்கங்க அக்கா ..
தாவரச் சாற்றில் வார்த்தெடுத்த எழில் .. வெண்மேகமாகும் நீர்போல வர்ணிக்க வார்த்தைதேடி முதல்வரியே பெருமழையாக பெய்கிறது .. சோளக்கதிர் மேனி கருமுத்து கண்கள் நெட்டிலை வால் பிரமாதம்.

சிறகு விரித்து பறக்கும்போது மேனி தீண்டும் கதிரவன் ஒளி சரண் அடைகிறது செம்மிளகாய் கொத்தும்போது .. அதுவே அலகின் வர்ணமும் ஆகிறது. அழகோ அழகு.

கொழுசும் கொழுவியதோ உன் குரலுக்குள் .. வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளி பறக்கையிலே ...

Kesavadhas ஐயா நீங்களே சொல்லுங்கள். எனக்கு கழுத்து வலிக்கிறது. இவ்வளவு அழகாக எழுத Meera Shree அம்மா அவர்களது குழுமம் நமக்கெல்லாம் உற்றதுணையாக கருத்துச்செறிவாக கவிதைகள் தேடித்தருகிறது. இவ்விடம் குழுமத்தார் கவியுறவுகள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.

ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும் பாவேந்தர் குரலுக்கு உயிர்தருகின்றன.  அன்பு வாழ்த்துகள்