About Me

2021/04/21

காலமும் கவிதை எழுதும்

நரைக் கோடுகள் கிழிக்கும் சிரசு

முதுமைத் திரைக்குள் மூச்சடங்கும் தேகம்

சுருக்கத் தளர்வில் முணங்கும் மூச்சு

உருவங்களை மறைத்திடும் கதிராளிப் பூ

பருவங் கடந்த தோற்றத்தின் முத்திரையாய்

முகங்காட்டி நிற்கின்றேன் உலகில்


இருந்தும் முதுமை மனதுக்கல்லவே

வாலிபத்தின் வனப்பினை எனக்குள் உணர்கின்றேன்

உணர்வின் வடிகாலாக வழிகின்றன கவிகள்

படைத்திடும் படைப்புக்கும் முதுமையுண்டோ

உடைந்தோடுகின்ற இரசிப்பில் தினமும் மூழ்கின்றேன்


சில மணிநேரங்கள் தனிமையின் இம்சிப்பில்

கலகலக்கின்ற நினைவுகள் கருவாகி

நிரப்புகின்றன வெள்ளைத் தாள்களில் தம்மை

உறவுகள் உதிர்க்கின்ற கண்டு கொள்ளாமை

உறவாடுகின்றன என்னுள்

எனக்காக நான் வாழ்வதில் ஆத்ம திருப்தி


என் வழிப்பாதையில் கிடக்கின்ற இலக்கியங்களைக் 

கண்டெடுத்துச் சுவைக்கின்றேன்

இப்பொழுதெல்லாம்

தனிமை என்னைத் தோடாமல் தொடாமல்

எங்கோ விலகிச் செல்கின்றது


வயதின் சடுதி ஏற்றத்தில்

வனப்பழிந்து தள்ளாடுகின்றன கால்கள் நிதமும்

சுவையற்ற நாவுக்குள் இசைகின்ற காற்றும்

தடுமாறியே வீழ்த்துகின்றது சொற்களை

இருந்தும் உடைந்து விடவில்லை நானும்

உணர்வின் ஊட்டத்தை வரிகளாக்கி

பா இசைக்கின்றேன் தென்றலுக்குள் குரலிணைத்து


சூழ்ந்திருப்போர் விரல் எண்ணுகின்றனர்

ஆழ் துயிலுக்குள் நனைந்திடும் நாட்களுக்காக

நானோ ஆறாம் விரலாக ஏந்துகின்றேன்

பேனாவை.......

உள்ளத்தில் குமுறும் என் உணர்வினைப்

பிழிந்தூற்றிப் படைப்பினை உருவேற்ற.....


பரிகசிக்கின்றனர்

கிழமெனும் உருவுக்குள்

கிளர்ந்தெழும் செந்தமிழின் வேட்கையை

உணராதவர்களாக


அனுபவத்தையும் ஆற்றலையும் சிந்தைக்குள் பதித்தே

எழுத்துக்களால்

அடையாளப்படுத்துகின்றேன் என்னையே

இளமைத் துடிப்பினை இன்னும் விட்டுக் கொடுக்காதவனாக

சந்தி வழிச் சந்ததிகளின்

சிந்தனைக்குள் என்னை ஊற்றுகின்றேன்

அடையாளப்படுத்துகின்றேன் என்னை அடுத்தவர் முன்னிலையில்


வனப்பினைத் தேடுகின்ற

புறத் தோற்றத்தினுள் அகப்படாதவனாக நான்

இருந்தும்

எழுத்துக்களாக எழுகின்ற என்னை

மறந்து விடாத கலைகளின் மடி

எனைத் தழுவும் வரை விழாமல் எழுவேன்

வரிகளாக மாறிக் கொண்டிருப்பேன்

அரிக்கின்ற கறையான்களுக்குள் ஆவியடங்கிப் போனாலும்

வரிகளால் வாழ்ந்து கொண்டிருப்பேன்

எனக்காக காலமும் கவிதை எழுதும்


கனல் கவி ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!