யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற
கணியர் கருத்தால் காசினியும் உவக்கும்
காலம் போற்றும் வாழ்வியல் முறையினை
உணர்ந்தே ஏற்றால் வாழ்வும் சிறக்கும்
உலக மக்கள் யாவரும் ஒன்றென
உறவாய்க் கருதி உணர்வால் கலப்போம்
எல்லா ஊரும் எமக்கு ஒன்றே
ஏற்போம் மக்களை அன்பால் கவர்ந்தே
வாழ்வில் தொடரும் நன்மை தீமை
வந்தணையும் இன்பம் துன்பம் யாவுமே
வருமே ஊழால்தானே தருவாரோ பிறரும்
அறத்தின் நிழலாய் ஒழுகுவோம் உணர்வினை
இறப்பும் பிறப்பும் புதுமை நிகழ்வோ
இறைவன் சித்தம் இயற்கை வழியே
இவ்வுலக இன்பமும் துன்பமும் நீடிக்குமோ
வெறுப்பினால் உரைத்திடலாகுமோ உலகம் இனிதன்று
கார்மேகம் பிணைந்தே ஊற்றும் மழைநீர்
களிப்பினில் ஒன்றாகுமே பேராற்று நீராகி
இயற்கையின் மடியினில் இசைந்திடுமே வாழ்வும்
இன்மொழி நவின்றனரே ஆன்றோரும் முன்னர்
பெரியோரைப் பெருமையில் வியந்தே பார்த்திடலும்
எளியோர் சிறியோரை இகழ்ந்தே தூற்றலும்
தவறென்றே உணர்ந்திடுவோம் சரிநிகராக மதித்திடுவோம்
தரணிக்குள் சமத்துவம் பேணியே வாழ்ந்திடுவோம்
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!