தாவரச் சாற்றினில் வார்த்தெடுத்த எழில்/
சோளக்கதிர் மேனியும் அதில் பொருத்திய/
கருமுத்துக் கண்களும் நெட்டிலை வாலும்/
கண்களைக் கவருதே களிப்பினில் உளமாட/
காற்றை உதைத்தே சிறகை உயர்த்துகையில்/
மோதுகின்ற ஓளியும் தீண்டுவதில்லையோ மேனிதனை/
செம்மிளகாய்ப் பழத்தைக் கொத்துகையில் சிதைந்ததுவோ/
சிவப்பும் உன்றன் அலகை நிரப்பி/
நீள்வானில் கரைகின்ற வண்ணங்கள் ஏழும்/
வளையமாகி வீழ்கின்றதோ வட்டக் கழுத்தினில்/
கொலுசும் கொழுவியதோ உன் குரலுக்குள்/
வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளிக்குள் பறக்கையில்/
ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும்/
உணர்வுக்குள் உனையேற்றி கற்பனைக்குள் உருவேற்றுகையில் /
உலகமதைச் சுற்றுகின்றாய் உளங்களில் மகிழ்வேற்றி/
பணத்தோடு புகழும் சேர்த்திடும் உறவாகின்றாய்/
குறவன் கரமதில் குவிக்கின்றாய் பணமதை/
சொன்னதைச் சொல்லும் நற்கிளியே நீயும் /
இலவு காத்த கிளியென்றாகி எமக்குள்/
அனுபவங்கள் துளிர்த்திட தடமும் பதிக்கின்றாய்/
ஜன்ஸி கபூர் - 17.11.2020
---------------------------------------------------------------
இராஜபுத்திரன் கவிதைகள்
----------------------------------------------------------------
ஜன்ஸி கபூர்
முதற்கண் வணக்கங்க அக்கா ..
தாவரச் சாற்றில் வார்த்தெடுத்த எழில் .. வெண்மேகமாகும் நீர்போல வர்ணிக்க வார்த்தைதேடி முதல்வரியே பெருமழையாக பெய்கிறது .. சோளக்கதிர் மேனி கருமுத்து கண்கள் நெட்டிலை வால் பிரமாதம்.
சிறகு விரித்து பறக்கும்போது மேனி தீண்டும் கதிரவன் ஒளி சரண் அடைகிறது செம்மிளகாய் கொத்தும்போது .. அதுவே அலகின் வர்ணமும் ஆகிறது. அழகோ அழகு.
கொழுசும் கொழுவியதோ உன் குரலுக்குள் .. வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளி பறக்கையிலே ...
Kesavadhas ஐயா நீங்களே சொல்லுங்கள். எனக்கு கழுத்து வலிக்கிறது. இவ்வளவு அழகாக எழுத Meera Shree அம்மா அவர்களது குழுமம் நமக்கெல்லாம் உற்றதுணையாக கருத்துச்செறிவாக கவிதைகள் தேடித்தருகிறது. இவ்விடம் குழுமத்தார் கவியுறவுகள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.
ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும் பாவேந்தர் குரலுக்கு உயிர்தருகின்றன. அன்பு வாழ்த்துகள்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!