About Me

2021/04/21

சிறுகோட்டுப் பெரும்பழம்

 

இயற்கை இசைவின் இதயக் காதல்/

இனிமையின் பொழிப்புரையாம் குறிஞ்சித் திணையில்/

காமச் சுவையும் கருவாகிப் பிறந்திட/

காவிய வரிகளும் உயிர்த்திடும் மனக்கண்ணில்/


இரவும் பிழிந்திடும் தனிமைச் சாரலில்/

உறவாகிக் களித்தன காதல் மலர்கள்/

உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகத்துள்/

புணர்ந்தன அன்பின் இதயங்கள் தமக்குள்/ 


புத்தியில் விதையாகி தடுமாற்றும் காமத்தின்/

சொத்தெனக் கனிந்ததே காதலர் நெஞ்சும்/

நித்திரைக்குள் உறைந்திடா விழிகளின் ஏக்கத்தில்/

முத்துப் புன்னகையும் வாட்டத்தில் சுருங்க/


இம்சையையும் இரசித்திடும் பருவத்தின் ஈர்ப்பில்/

இதயமும் தொலைந்திடத் தலைவனும் தலைவியும்/

கூடியே களித்துப் பிரிந்திடும் வேளையில்/

தேடியே வந்திட்டாள் தலைவியின் தோழி/


சந்தித்தாள் தலைவனை செப்பினாள் தன்னுரையை/

சிந்தனைச் சுழியினில் சுழல்காற்றாய்த் தலைவனும்/

வேரும் சுமந்திடும் வேர்ப்பலாச் செறிந்திடும்/

பெரும் மலையினில் வாசம் செய்பவனே/


மூங்கில் வேலியினில் முக்காடிடும் பலாவைத்/

தாங்கிடுமே உம்மூரும் பலாவினைக் காத்தே/

பொங்கிடும் உம் காதலும் அவ்வாறன்றோ/

பங்கமின்றி தங்கமாக மின்னுமே உமக்குள்/


அலரும் பரந்திடாது பழிச்சொல்லும் உரையார்/

மலருமே உம்மில் நினைவுகளும் பாதுகாப்பாக/

தலைவியின் காதலோ சிதைந்திடும் வலியில்/

அலைந்திடும் பழிச்சொல்லும் விழிநீராகி வீழ்ந்திடுமே/


சிறிய கிளையில் தொங்கிடும் கனியவள்/

அறுந்து வீழ்ந்திடுவாள் உயிரும் வருந்திட/

பாதுகாப்பில்லா அவள் காதலும் முறிந்திடின்/

பறிபோகுமே உயிரும் அக்கணமே வெந்து/


அறிந்திடார் அடுத்தவரும் பெண்ணவள் மெய்க்காதலை/

அனலும் மொய்த்திடும் அச்சத்தின் உச்சத்தில்/

மனதினை அறிந்திட்ட நீயே விரைவினில்/

கனவும் மெய்ப்பட கரம்பிடித்திடு விரைவினில்/


என்றுரைத்தாளே தோழியும் தலைவியின் குறிப்பறிந்து/

இனித்திடும் பலாவின் முதிர்ச்சிக் காதலும்/

இதயத்தின் வெளியினில் இன்பத்தைக் குலைத்திடும்/

ஈருயிரை இணைத்திடும் ஆருயிர்ப் பிணைப்பினில்/


ஜன்ஸி கபூர் - 7.10.2020

 

Kesavadhas

ஜன்ஸி கபூர் இலக்கியக் கவிதையமைப்பில் படிமங்கள் பளிச்சிட

இனிய தமிழில் வனையப்பட்ட கவிதைப் புனைவு இஃது!

இந்த சொல்லாட்சிப் படிமங்கள் மலைக்க வைக்கின்றன!

இனிமையின் பொழிப்புரை

இரவும் பிழிந்திடும் தனிமைச் சாரலில்

உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகம்

புணர்ந்தன அன்பின் இதயங்கள் தமக்குள்

நித்திரைக்குள் உறைந்திடா விழிகளின் ஏக்கம்

இம்சையை இரசித்திடும் பருவத்தின் ஈர்ப்பு

அனுபவப் பட்டவர்க்கே ஆனந்தம் தெரியும் ஆனால் அதற்குமொரு கவித்துவம் வேண்டும்!

அலைந்திடும் பழிச்சொலும் விழிநீராகி வீழ்ந்திடுமே!

அனலும் மொய்த்திடும் அச்சத்தின் உச்சத்தில்..

ஈ மொய்க்கும் தீ மொய்க்குமா?

அபரிமித கற்பனை!

வென்றும் வாழுமே முதிர்ச்சிக் காதல்!

கவிதை சிறப்பு!

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!