About Me

2012/08/11

அல்(f) பாத்திஹா




திருமறை தரும் அருள் வசனங்கள் அல்லாஹ் எனும் அழகிய 
எழுத்துருக்களுடன் இன்றைய பதிவாக  என் வலைப்பூவில் வாசம் தருகின்றன...அல்ஹம்துலில்லாஹ்!

---------------------------------------------------------------------------------
"அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)  "  (1:1)





"அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது "(1:2)


"(அவன்) அளவற்ற அருளாளன் மிகக் கிருபையுடையவன் "( 1: 3)



"(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி "( 1:4)



"(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் "(1:5)



"நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! "  ( 1:6)






முகநூலும் தவறுகளும்


உலகமானது நவீன தொழினுட்பத் தொடர்பாடல் மூலமாக கைக்குள் சுருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முகநூலின் வளர்ச்சியும் நம்முள் ஏறுமுகம் காட்டி நிற்கின்றது. நம்முன்னால் ஒருவரின் முகநூலின் பயணத்தடங்களாக அடையாளப்படுத்தி நிற்பவை அவர்கள் வெளிப்படுத்தும் பதிவுகளும், பின்னூட்டங்களுமே!

ஒருவர் மனதை அறியவேண்டுமானால் அவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகளை அவதானிக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகள் என்பது ஒருவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பே!

முகநூலானது ஓர் திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் கட்டுப்பாடின்றி உட் செல்லலாம். நண்பர்கள் வடிவில் தீங்கு பயக்கும் உளவாளிகளும் நம்முலகில் புகுந்து தீங்கினை நமக்குள் எத்திவைக்கலாம். ஆனால் மறுபுறம் தேச எல்லைகள் கடந்து பல திசைகளிலும், பல நாடுகளிலும் வாழும் பல மனிதர்களின் கரங்களை பேதமைகள் களைந்து நட்புடன் இணைக்கும் பாலமாகவும் முகநூல் எனும் இணையத்தளம் விளங்குகின்றது. தொலைவில் வாழும் முகம் நோக்காத பலர் அக எண்ணங்களின் ஒருமைப்பாட்டுடன் ஆரோக்கியமாக இங்கே ஒன்றிணைகின்றனர். இந்நட்புக்களில் வெகுசிலவே வாழ்வின் கடைசிக் காலங்கள் வரை தொடர்ந்துவருகின்றன.

எந்நட்பாயினும் அதன் செழுமைக்கு புரிந்துணர்வு மிகவும் அவசியம். நட்பும், அன்பும் அதிகரித்த நிலையில் புரிந்துணர்வின்றி பிரயோகிக்கப்படும் சிறுவார்த்தைகளாயினும் மன மகிழ்வைக் காயப்படுத்தி, நட்பை அழவைக்கக் கூடியவை.

 "கிட்டவிருந்தால் முட்டப் பகை"

இது நம் வாழ்வின் அனுபவங்களால் பிரயோகிக்கப்பட்ட முதுபழமொழி ....

பழமொழிகள் யாவும் மறுக்கப்படாத உண்மைகள்..முகநூலில் நாம் நட்பின் ஈர்ப்பால் அடிக்கடி  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செய்திப் பரிமாற்றம் காரணமாக சாதாரணமான இருவர்  நட்பின் உலகிற்குள் வசீகரத்துடன் தள்ளப்படலாம். நண்பர்கள் காதலர்களாக மாற்றப்படலாம். அவ்வாறே அதிக சுதந்திரமான புரிந்துணர்வில்லாத கருத்தாடல்களின் மூலமாக நல்ல நண்பர்களுக்கிடையே மௌனமாகத் தோன்றும் மனக்கசப்பு, பகைமை மூலம் இடைவெளியையும் ஏற்படுத்தப்படலாம்.

அன்பான நட்பினர் பிரிவையும் வென்று நிற்பர் என்பது பொதுமொழி. ஆனால் இவை வெறும் சொல்லாடல்களுக்குப் பொருந்தினாலும். நிஜ நட்பில் அதிக அன்பே எதிர்பார்ப்பாக அமைந்து மனவேதனைக்கு வழிகோலும்.

முகநூல் நட்பை உறுதிப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அடிக்கடி குறித்தவொருவருடனான  அநாவசிய செய்திப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும், உண்மையில் முகநூல் "இன்பாக்ஸ்" என்பது விரோதத்தை வளர்க்கக் கூடிய அழுக்குக் கூடை முகநூலில் அவ்வவ்போது இடப்படும் பதிவுகளுக்கான விருப்புக்களையும், வெளிப்படையான நல்ல ஏற்புடைய பின்னூட்டங்களையும் இடுவது கூட நல்ல நட்புக்கான வழிமொழிதல்களே!  தனிப்பட்ட  செய்தியாடல்களைத் தவிர்த்து நட்பைக் காக்கலாம்.

சில நிகழ்வுகள் தரும் படிப்பினைகள் நமக்கு துன்பம் தருபவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் கூட அவை நம் நிம்மதியை வார்க்கும் நிகழ்வுகளே என்பது காலம் நமக்குள் காட்டி நிற்கும் உண்மைகளாகின்றன. சில மாற்றங்கள் ஏமாற்றமாக மாற்றப்படுவதை தவிர்க்க "இன்பாக்ஸ்" செயலிழக்கப்படுவது அவசியம்.

மேலும் முகநூல் பலர் சங்கமிக்கின்ற பொதுச்சந்தை. இவற்றில் பல நல்ல விடயங்கள் பரிமாறப்படும் அதே நேரம் தீமைகளும் பரிமாறப்படுகின்றன. "போலி" முகங்கள் பல இங்கு உலாவுவதற்குக் காரணம் ஒருவர் எத்தனை முகநூல் பக்கங்களையும்  உருவாக்கலாம் எனும் தாராளமயக் கொள்கை யாக்கமாகும். ஈமெயில் முகவரி மட்டுமேயிருந்தால் போதும் முகநூல் உருவாக்கத்திற்கு தடையேதுமில்லை. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முகநூல்களை உருவாக்குவதை கட்டுப்படுத்தினால் தான் போலிகள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படலாம்.

மேலும் முகநூலில் அவதானிக்கப்படும் சில தவறுகளாக பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்க்குமாறு வலைப்பின்னல் துறைவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தவறு 1 -சுலபமான ஓர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தல் (Using a Weak Password)
----------------------------------------------------------------------------
பெயர்கள், சுலபமான வார்த்தைகள், பிறந்த திகதி, இலக்கங்கள் என்பவற்றைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்தும் போது அவற்றை விஷமிகள் இலகுவில் திருடி, நம் பெயரில் அநாவசியமான முறைகேடான பக்கங்களை உருவாக்கி உலாவ விடுவார்கள். இவர்கள் இறைவனுக்கே அஞ்சாத மிருகங்கள். மனிதர்களை மதிக்கவோ, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தவோ மாட்டார்கள். இவர்கள் நமது அழகிய முகநூல் பக்கங்களுக்குள் உலாவுவதை தடுக்க முறையான பாதுகாப்பு வேலியை திருடப்படாத கடவுச்சீட்டுக்கள் மூலம் உருவாக்குதல் வேண்டும். நமது கடவுச்சீட்டுக்களில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் என்பவற்றையும் ஒருமித்த நிலையில் கலவையாக்கியிடல் வேண்டும்.

தவறு 2 - நமது பிறந்த திகதியை முழுமையாக வெளிவிடுதல்
-------------------------------------------------------------------------------
(Leaving Our Full Birth Date in Our Profile)
ஏனெனில் இத் தகவல்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளைக் கூடத் திருடத் தயாராகவே இருப்பார்கள் இம் முகநூல்த் திருடர்கள்........

தவறு 3 - சுய பாதுகாப்பு வாய்ப்புக்களை அலட்சியப்படுத்துதல்
(Overlooking Useful Privacy Controls)
-------------------------------------------------------------------------------
நமது தொடர்புகளை எப்போதும் நண்பர்கள் மட்டும் எனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சொந்த, குடும்ப, தொழில் விபரங்கள், தொலைபேசி இலக்கம், முகவரி என்பன காட்சிப்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும்.

தவறு 4 :-நமது உறவினர், குழந்தைகளின் பெயரை அடிக்கடி பயன்படுத்துதல்
--------------------------------------------------------------------------------
தவறு 5 :-நமது நிகழ்கால செயல்களைப் பற்றிக் குறிப்பிடுதல்.
--------------------------------------------------------------------------------
உதாரணமாக நான் வெளியூருக்குச் செல்கின்றேன். இந்த திகதியில் வீட்டுக்கு திரும்புகின்றேன் போன்ற தகவல்கள் இடப்படுவதைத் தவிர்த்தல்.

தவறு 6 : கூகுள் போன்ற தேடு இயந்திரங்களின் பார்வையில் நம் பெயர்கள் சேரச் செய்தல்..
---------------------------------------------------------------------------------
இதனால் அறிமுகமில்லாதவர்களுக்கும் நமது பெயர் விபரங்கள் சென்றடையக் கூடிய வாய்ப்புண்டாகும். எனவே பேஸ்புக்கின் சுய பாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook's Privacy controls)
நண்பர்கள் மட்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்தல்.

தவறு 7 : _ மேற்பார்வையில்லாமல் சிறுபிள்ளைகள் முகநூல் பயன்படுத்த அனுமதித்தல்.
----------------------------------------------------------------------------------
மேலே கூறப்பட்ட விடயங்கள்  தவறுகளாகக் அனுபவசாலிகளால் குறிப்பிடப்பட்டாலும் கூட அவை பாதிப்பன பெண்களைத் தான். ஏனெனில் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி உல்லாசமாய், உற்சாகமாய் உலாவும் கலைக்கூடம், இலக்கிய இல்லம், விளையாட்டுத்தளம், அரட்டை அரங்கம் என எல்லாப்  பரிமாணங்களும் இந்த முகநூலில்தான் சங்கமிக்கின்றன. ஆண்கள் எதிரிகளின் விமர்சனங்களால் பாதிக்கப்படும் போது அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றார்கள். ஆனால் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் குடும்பம், சமூகம் அனைத்துமே சகதிக்குள் அமிழ்கின்றன.

முகநூல் எனும் தொலைநூலில் நல்ல விடயங்களை மட்டுமே நாம் வாசிக்க முயற்சிக்கும் போது நம்மைச் சூழவெழும் இந்த இடர்பாடுகளைத் தவிர்ப்பது நமது கட்டாயக் கடமையாகும். நாம் இங்கு சஞ்சரிக்கப்போகும் சொற்ப நேரத்திற்குள் நமக்கிடையே மன அழுத்தங்களையும், துன்பங்களையும் இம் முகநூல் தருமாயின், நாம் இதனை விட்டு நகர்ந்து விடுவது நலம் பயக்கும். எனினும் இயன்றவரை நம்மைச் சூழ வீசப்படும் மனஅழுத்தக் காரணிகளைத் கண்டறிந்து, அவற்றைக் களைபிடுங்க பழக்கப்படுவோமாயின் நம் இயல்பான நடமாட்டம் நமக்குமிங்கே வசந்தத்துடன் கைகுலுக்கும்.

தவறுகளைத் திருத்துவோம்.......அது நம் நிம்மதிக்கான அறைகூவல் !



2012/08/10

சிறுகதைகள், விமர்சனங்கள் - ஒரே நோக்கில்



இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் சிறுகதைகள், விமர்சனங்கள், படத் தொகுப்புக்கள்  ஒரே பார்வையில் :- 

(உள்ளே)

இத் தலைப்புக்களின் மீது நேரடியாக அழுத்தி உரிய பதிவுக்குள் நுழைக

சிறுகதைகள்/ குட்டிக் கதைகள்
-------------------------------------------
01. வழி மாறும் பயணமொன்று
02. கானல் நீர்
03. ஆட்டோ கிராப்
04. வாழ்க்கைத்துணை
05. மயக்கமென்ன
06. சாதனை
07. பாட்டி எங்கே போறியள்
08. தவிக்கும் மனசு
09. அந்த சில நிமிடங்கள்
10. என் வாழ்வு உன்னோடுதான்
11. கருகும் மலரொன்று
12. மனசே மனசே
13. மாற்றங்களும் ஏமாற்றங்களும்

---------------------------------
விமர்சன வெட்டுமுகம்
--------------------------------
01. வேரறுதலின் வலி
02. அடையாளம்
03. கவிதைக்காரன்
04. முத்து
05. கண்ணீர் பேசும் ஞாபகங்கள்
06. நண்பனுக்கோர் மடல்
07. மீண்டு வந்த நாட்கள்
08. என்றும் நேசத்துடன்
09. முன்மாதிரி

---------------------------------------------------------------
பதிவிடப்பட்டுள்ள படங்களின் தொகுப்புக்கள்
---------------------------------------------------------------
01. நான் வரைந்தவை 
02. சில நினைவுகள்
03. கதீஜா முராத்
04. உறவுகள் தொடர்கதை
05. நினைவு முகங்கள்
06. நினைவிலிருத்தி
07. நன்றி சொல்லவே
08. Azka & Sahrish



ஒற்றைச் சொல் !


நீயுதிர்த்த ஒற்றைச்
சொல் ............
என் உயிரறுக்கும் தீப்பந்தமாய்
மிரட்டி நிற்கின்றதென்னுள்!

உன் முகம் காணா நேசத்தில்
சிலிர்த்தவென் பாசத்தில்..........
விஷம் தடவும் தேளானாய்
அடுத்தவர் வார்த்தைக்காய்!

தீப்பற்றியெரிகின்றேன்
நீரூற்ற யாருமின்றி .........
ஒற்றை வழி போகின்றேன் - உன்
ஒற்றைச் சொல் வழிநடத்த!

உன் வெந்நீராய் வார்த்தைகள்
வெறித்தனமாய் எனைக் கருக்கவே........
இற்றுப் போன இதயமும்
குற்றுயிராய் வெந்ததுவே!

நீ தந்த கனவுகள்
விழித்திரையறுத்தே மிரண்டோட.....
என் உறக்கமறுத்து கூவுகின்றாய்
நானுன் அந்நியமென!

 நீர்க்குமிழி வாழ்க்கையிலே
நீ விதைத்த வர்ணங்கள்..............
கலைந்ததுவோ  ரசிக்கின்றாய்
உளமதை சிதைத்தே தான்!

இற்றுவரை நானுன்னை
வேற்றவனாய் நினைக்கவில்லை!
நெஞ்சுடைத்தே போகின்றாய்
பஞ்சென்னை காற்றிலுதிர்த்தே!

வெற்றுக் காகிதமென்னில்
நீ போட்ட  கோலங்கள்...........
உன்னொரு சொல்லாலின்று
முற்றுப்புள்ளியாய் ஆனதுவோ!

ஐயகோ...................!
என் பயணத்திலினி தடைக்கல்லாய்
உன் ஒற்றைச் சொல்.........
உயிர் துறந்து போகின்றேன்
சமுத்திரங்களை விழியேந்தி!

பல நிஜங்கள் தெரிந்ததில்
சில கனவுகள் எரிந்ததுவே!
இன்னலின் அகதேசத்தில்
அனலும் புனலுமுறவானேதே!

அடுத்தவருக்காய் எனை விரட்டி- யுன்
நினைவுப் படுக்கையில் முள்விரித்தே.................
நீ தந்த முகவரிகள் - இனியென்
மயான  நிலவறைகள்!

ஆகாயவெளியில் அந்தரிக்கும்
விண்மீன்கள் கதறியழ.................
வெள்ளிநிலா உள்ளம் நொந்து
இருளுக்குள் இறங்கிக் கிடக்கும்!

"நிஜங்கள் வலிக்குமென்ற"
உன் வார்த்தையென் சொத்தாக்கி......
தனிவழியே போகின்றேன்
இனியுன் பார்வை  மறைந்தே!

கள்ளிப்பால் நீயூட்டி விட்டாலே
களிப்போடு அமுதமாகும் என்னுள்............
ஐயத்திலென் னன்பைக் குலைத்தே
சொல்லிட்டாய் ஒற்றைச் சொல்!

ஜன்ஸி கபூர்