தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்த பூரண நிலவின் முகம் யன்னல் கண்ணாடிக்குள் கசிந்து கொண்டிருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி எனும் ஏழு வயதுச் சிறுமி.
'நள்ளிரவில் காணும் கனவுகள் பலிக்குமென்று அம்மா சொன்னாவே! ஒருவேளை இந்தக் கனவும் பலித்து விட்டால் '
அச்சமும்இ ஆர்வமும் பிசைந்த கலவையாக மனமும் இறுகிக் கொண்டது. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி இரண்டு என்பதை உணர்த்திக்; கொண்டிருந்தது. பக்கத்தில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவும் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார். ஆர்வம் அவளைத் தைரியபபடுத்தியது. யாருமறியாமல் வீட்டு முன்வாசல் கதவைத் திறந்தாள். குளிர்மையான தென்றல் காற்றில் உடல் விறைப்பதைப் போன்ற பிரமை.
அங்கே.............!
கனவில் கண்ட அதே வெள்ளைக் குதிரை வாசலில் இவளுக்காகக் காத்திருந்தது. ஆர்வத்தில் அருகில் சென்று குதிரையைத் தொட்டாள். கண்ணிமைக்கும் நொடிக்குள் குதிரைக்குள் இரண்டு இறக்கைகள் முளைத்தன.
'பயப்படாமல் சீக்கிரம் என்மீது ஏறு. உனக்கொரு அதிசயம் காட்டுகிறேன்'
எனக் குதிரை சொன்னதும் வேகமாக மறுத்தாள்.
'வீட்டுக்குத் தெரிஞ்சா ஏசுவாங்க ............. நான் வரல நீ போ'
என்றாள். மனம் போக விரும்பினாலும் உதடுகள் மறுப்பை வெளிப்படுத்தின.
ஆனாலும் குதிரை அவளை விட்டு நகரவேயில்லை. திடீரென்று மரங்களைச் சுழற்றியவாறு வேகமான காற்று வீசத் தொடங்கியது. ஜனனிக்குள் மயக்கம் வருவதைப் போன்ற பிரமை. தன்னையுமறியாமல் மந்திரத்தில் கட்டுப்பட்டவளாக குதிரையில் ஏறி அமர்ந்தாள். எல்லாம் கனவுபோல் சுழலத் தொடங்கியது. குதிரையும் வேகமாகப் பறக்கத் தொடங்கியது. ஓரிடத்தை அடைந்ததும் குதிரை தனது பயணத்தை நிறுத்தியது. இறங்கினாள் மெதுவாக.
'இது எந்த இடம்........:'
பாதி மயக்கத்திலிருந்து விழித்தவளாக கேட்டாள்.
அவளைப் பார்த்து மாயக் குதிரையும் சிரிக்கத் தொடங்கியது. 'குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்த மாயக்குதிரை திடீரென தன் சிரிப்பை நிறுத்தியதும்இ அவள் திகைத்துப்போய் திரும்பிப் பார்க்க அங்கே...'
ஒளி பிம்பமொன்று அவளருகில் வந்து நின்றது. ஆச்சரியத்தில் ஜனனியின் கண்கள் விரிந்தன. இத்தனை நாட்களாக தனது வீட்ட முற்றத்திலிருந்து பார்த்துப் பார்த்து ரசித்த பௌர்ணமி நிலாவின் அருகிலா அவள்? நம்பவே முடியவில்லை. மாயக்குதிரையின் இறக்கைகளை பௌர்ணமி வருடிக் கொண்டிருந்தாள்.
' நீ சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என்னைக் காட்டி சோறு ஊட்டினாத்தான் நீயும் சாப்பிடுவே. அப்போ உனக்கு ஐந்து வயதிருக்கும். ஒருநாள் என்னைக் கூட்டிக் கொண்டு வரும்படி உங்க அம்மாக்கிட்ட சொல்லி ரொம்ப நேரமா அழுதே. அப்பவே உன்னை இங்கே கூட்டிக் கொண்டு வரணுமென்று நினைச்சேன். ஆனால் ஒரு குறித்த நாளில்தான் என்னுடைய ஒளியும் வெப்பமும் மனிதர்களுக்கு தீங்கு செய்யாது. அந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். இன்றுதான் அந்த நாள். வா வானத்தைச் சுற்றிப் பார்க்கலாம்'
என்றதும் ஜனனிக்குள்ளும் இறக்கை முளைத்த உணர்வு. மாயக் குதிரையும் பௌணமிச் சந்திரனும் விடியும் வரை வானத்தை சுற்றிக் காட்டி மகிழ்வூட்டினார்கள்.
விடியல் ஆரம்பிக்கும் நேரம் மாயக்குதிரை யாருமறியாமல் ஜனனியை வீட்டில் இறக்கி விட்டது. அவளும் எதுவும் நடக்காததைப் போல் அம்மாவுக்கு அருகில் உறங்குவதுபோல் பாவனை செய்யத் தொடங்கினாள்.
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!