பாடசாலைக்கல்வியில் காணப்படுகின்ற பொதுப் பிரச்சினைகள் பற்றிய என் பார்வை
தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கை மாலைதீவு தவிர்ந்த ஏனைய நாடுகளில் மக்கள் எழுத்தறிவு பெண்கள் எழுத்தறிவு உட்பட ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்வு வீதம், இடைவிலகல் வீதம் என்பன எப்பொழுதும் பாதகமாகவே உள்ளது. தென்னாசியாவில் மக்கள் தொகையானது உலக மக்கள் தொகையில் 22% காணப்பட்டாலும்கூட, அப்பிராந்தியத்தில்தான் உலகின் எழுத்தறிவற்றவர்களில் 46% வசிக்கின்றார்கள். தென்னாசியாவில் வாழும் எழுத்தறிவற்றவர்கள் அதிகமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் வாழ்கின்றார்கள். இந்தியாவில் பாடசாலையைப் பார்த்தறியாதவர்கள் 5 கோடி . இவர்கள் மொத்த சத வீதத்தில 70% ஆகும்.
சார்க் நாடுகளில் பாடசாலைக் கல்வி தொடர்பான பிரச்சினைகள் எழக் காரணங்கள்
1. சமூகத்தில் காணப்படுகின்ற வறுமையும் சமமின்மையும்
ஆனால் இலங்கையில் மக்களின் வறுமையைப் போக்குவதற்கு சனசக்தி போன்ற பல்வேறு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளும், இலவசக் கல்வி முறையும் பாடசாலைக் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு ஆயிரம் பாடசாலை, பிள்ளை நேயப் பாடசாலை போன்ற பல முயற்சிகளினூடாக தரமான கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைமுறையிலிருப்பதனால் மக்களின் எழுத்தறிவு வீதம் 98 வீதமாக உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.
2. பெரும்பான்மையினரின் கலாசாரங்களின் ஆக்கிரமிப்பு கல்வி மீது ஏற்படுத்தப்படும்போது அத்தகைய ஆக்கிரமிப்பை சிறுபான்மையினர் விரும்புவதில்லை. பெரும்பான்மையானவர்களின் கலாசாரம் சார்ந்த கல்வி வழங்கலினால் சிறுபான்மையினரின் கலாசார தனித்துவம் சீரழிந்து விடும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் தாய்மொழிக் கல்வி தத்தமது சமயக்கல்வி சுதந்திரமாக அனுபவிக்கக் கூடியதாக இருத்தல் போன்ற நடைமுறையில் வெவ்வேறு கலாசாரப் பின்னணியில் பிற சமயங்களில் தாக்கம் செலுத்தாத இனத்துவப் பாடசாலைகள் இலங்கையில் காணப்படுவதனால் இங்கு கல்வி வளர்ச்சி பெற்றுள்ளோர் அதிகளவு காணப்படுகின்றார்கள்.
3. இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம் போன்ற நாடுகளில் தந்தைவழி முறை, மானிய முறை, சாதீயவாதம் வர்க்க அடிப்படையிலான வேறுபாடுகள் அடிப்படைவாதம் என்பன அநீதி சமத்துவமின்மை என்பவற்றின் பாரம்பரியத் தளங்களாகும். இந்நாடுகள் இத்தடைகளை உடைத்தெறியும் கல்வியை கல்விச்சூழலை ஏற்படுத்தவில்லை. பின்னிற்கின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யாவருக்கும் கல்வி என மத பேதமற்ற முறையில் கட்டாயக் கல்வியாக வழங்கப்படுகின்றது. இதனால் இங்கு எழுத்தறிவு வீதம் அதிகமாகக் காணப்படுகின்றது.
4. தென்னாசியாவில் புகழ் பெற்ற பாரம்பரியமுடைய நாகரிகங்களின் வழி வந்த சுதேச அறிவுத்தொகுதியொன்று உண்டு. ஆனால் இன்றைய கல்வி முறைகள் இச்சுதேச அறிவுத்தொகுதியை முற்றாக ஒதுக்கியே வைத்துள்ளன. பாடசாலை பாட ஏற்பாட்டில் சுதேச அறிவுக்கு இடமில்லை. இலங்கையுட்பட அத்தகைய நாடுகளில் வெளிநாடுகள் செயற்படுத்தும் பாடசாலை பாட ஏற்பாட்டையையே பயன்படுத்துகின்றன. இவ்வாறான வெளிநாட்டு அறிவுத்தொகுதி மாணவர்களின் சொந்த சுற்றாடல் அனுபவங்களை வழங்குவதில்லை.
5. இன்று கல்வியானது பயன்பாட்டு ரீதியில் நோக்கப்படுகின்றது. பரீட்சைச் சித்திகள் பெற்றுத் தரும் கல்வித்தகைமைகளையே உயர் தொழில் வாய்ப்புக்கள் எதிர்பார்க்கின்றன. இந்நிலையில் கல்வியின் நோக்கம் தனியாளின் வளர்ச்சி மேம்பாடு எனும் சிறிய வட்டத்திலேயே அடக்கப்படுகின்றது.
6. தென்னாசிய நாடுகளில் வாழ்வோர் பல மொழிகளைப் பேசுகின்றார்கள். அவ்வாறான பல்லினத் தன்மையும், பன் கலாசாரமும் ஒரு நாட்டின் பலமாகவும் வலிமையுமாக இந்நாடுகள் கருதாமல் ஒருமைத் தன்மையை வலியுறுத்துகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு பிரதான மொழிகளாகிய சிங்களம், தமிழ் மொழிகளில் தமது தாய்மொழிகளில் கல்வி கற்கும் வசதிகள் காணப்படுவதால் கல்வி வழங்கலில் எற்றம் காணப்படுகின்றது.
7. அவ்வாறே தென்னாசிய நாடுகளில் தாய்மொழிகளினூடாகவும் பண்பாட்டுத் தளங்களினூடாகவும் கற்பிக்கப்படுவதில்லை. அவர்கள் தமது சொந்த பண்பாட்டுத் தளங்களிலிருந்து அகற்றப்பட்டு அந்நிய பண்பாட்டுக் கலாசாரங்களுக்குப் பயிற்றப்படுகின்றார்கள். இந்நிலையில் கல்வித் தேர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இலங்கையில் தாய்மொழிக்கல்வி வழங்கல் நடைபெறுகின்றது.
8. உயர்ந்த கற்றோர் குழுவினருக்குரிய பண்பாட்டையும் சித்தாந்தங்களையும் கொண்டதாகவே பாடசாலை பாட ஏற்பாடு காணப்படுகின்றது. இலங்கையிலும் இப்போக்கு காணப்படுகின்றது. ஆனால் இப்போதெல்லாம் இங்கும் உயர் கல்வி பெற்ற பட்டதாரிகள் வேலையில்லாப் பிரச்சினைக்கு முகங் கொடுத்துள்ளார்கள்.
ஒரு நாட்டின் அதியுயர் கல்வித் தகைமை பெற்றவர்களுக்கு தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் அங்கு வேலைவாய்ப்பின்மை ஓர் பிரச்சினையாக உருவெடுக்கின்றது. எனவே பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி பெற்றவர்கள் தேசிய வளங்களைப் பயன்படுத்துவதற்கும் வருமானம் பெறுவதற்கும் ஏற்ப தொழில்வாய்ப்பினை இலகுவாகப் பெறும் விதத்தில் கல்வி வழங்கல் காணப்பட வேண்டும். இன்று இலங்கையிலும் தொழினுட்பத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படும் கல்வியில் பல குறைபாடுகள் காணப்படுவதனால் பட்டதாரிகள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராடும் நிலை காணப்படுகின்றது.
இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளில் பட்டதாரிகளின் வேலையின்மை தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணங்கள் சில வருமாறு
1. கல்வியானது பொருளாதார பண்டமாகக் கிடைப்பதற்குப் பதிலாக இலவச பண்டமாகக் கிடைத்தல்.
2. மாணவர்கள் கல்வி கற்கும் காலத்தில் அவர்களின் எதிர்கால தொழில் பற்றிய சிந்தனைகளும் மனப்பாங்குகளும் வளர்க்கப்படாதிருத்தல்.
3. அரச தொழில் வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்களை விடவும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல்.
4. வெளிவாரி மட்டும் தொலைக்கல்வி நிலையங்கள் பல உணர் பட்டங்களை வழங்கும் நடைமுறை அதிகமாக இருத்தல்.
5. துனியார்துறை தொழில்வாய்ப்புக்களை விடவும் அரசதுறை தொழில் வாய்ப்புக்களில் நலன்புரி விடயங்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால் உயர்கல்வி கற்றவர்களின் நாட்டம் அரச தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதிலேயே காணப்படுகின்றது.
6. புட்டதாரிகளுக்கான திருமண சந்தை கிராக்கி அதிகமாக இருத்தல்.
7. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கம் அதிகமாக இருத்தல்.
கற்றோர் தொழிலின்மை ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களாவன
1. அவர்களுக்காக செலவளிக்கப்பட்ட அரச முதலீடுகள் மீண்டும் வருவாய் தருவதற்கு தவறியமை.
2. பட்டதாரிகள் தமது ஆற்றலிலும் குறைவான வேலைகளில் இணைவதால் உற்பத்தித் திறன் குறைவு.
3. அரசாங்க வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் அதற்கான வருவாய்களைத் தராததால் கல்விச் செலவை அரசு குறைத்துக் கொண்டமை
4. சமூக கவனத்தை ஈர்க்கின்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் உயர்கல்வி பற்றிய சமூக நாட்டம் பாதிக்கப்பட்டமை.
5. பட்டதாரிகளின் வேலையின்மை சில சமயங்களில் கவனமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகின்றன.
6. அரசாங்கத்தின் உயர்கல்வி பற்றிய கொள்கைகளில் தனியார்துறை நோக்கிய ஆர்வம் அதிகரிக்க இதுவே காரணமாகும்.
கற்போர் வேலையின்மையைக் குறைக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
1. கல்வியில் மாற்றம்
1. அறிவுசார் கல்வி .................... திறன் கல்வி
2. இலவச பண்டம் ..................... பொருளாதார பண்டம்
3. அரசதுறை .................... தனியார் துறை
4. கற்றல் .................... வேலை
2. அபிவிருத்திசார் மாற்றம்
5. உயர்கல்வி கலைத்திட்டங்களில் தொழில் மற்றும் தொழினுட்ப பாட உள்ளடக்கங்களை சேர்த்தல்.
6. கற்கும் காலங்களில் தொழில் பற்றிய வகுப்புக்கள் செயலமர்வுகளை நடாத்துதல்.
7. தொழில் வாய்ப்பு நிறுவனங்கள் பட்டங்களை வழங்குதல்.
8. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களை இணைக்கும் செயற்றிட்டங்களை வழங்குதல்.
9. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கான செயற்றிட்டங்களோடு உயர்கல்வி நிறுவனங்களை இணைத்தல்.
9 இன்றைய பாடசாலை அமைப்பிலும் புதிய சீர்திருத்தங்களிலும் முக்கிய இரு அம்சங்கள் காணப்படுகின்றன.
1. பாடசாலைகளில் 1 AB, 1C, Type II, Type III, தேசிய பாடசாலைகள் என வகைப்பாடுகள் உண்டு. அத்துடன் படிமுறை வளர்ச்சியும் காணப்படகின்றது.
2. பாடசாலைக் கல்விக்கும் உயர்கல்விக்குமிடையில் திறந்த பாடசாலைகள், முறைசாராக்கல்வி, திறந்த பல்கலைக்கழகம் போன்ற நடைமுறைகள் உண்டு.
10. குடியேற்ற நாடுகள் உருவாக்கிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுகிய நிலையிலே காணப்படுகின்றது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. உள்ளுர் மட்டத்தில் சுயாதீனமாக தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் காரணமாக அதிகளவான புத்தாங்கள் பெற வாய்ப்பில்லை.
11. தென்னாசிய அரசுகள் தாம் உருவாக்கிய கல்விச் சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் அனுமதி பெறுவதற்காக மக்களையும், சமூகத்தையும் பயன்படுத்துவதில்லை.
12. வளப்பற்றாக்குறை நிவர்த்திக்காக வெளிநாட்டு உதவிகள் பெறப்படுகின்றன. இவை தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்களிப்பு குறைவு.
13. கல்வித்துறைகளில் தனியார் துறை அரசின் கல்விச் செலவுகள் கல்வி வளர்ச்சிக்கு சார்பானதாகக் காணப்படவில்லை.
(கல்வி முதுமாணி கற்கைக்காக எழுதிய கட்டுரை)
ஜன்ஸி கபூர் - 20.04.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!