About Me

2021/04/14

காண்டலின் உண்டு என்னுயிர்

 


அன்பினை அணிந்தே அகமகிழ்ந்த காதலின்/
அற்புதச் சுவையினில் நனைந்திட்ட இதயங்கள்/
இறக்கை விரிக்கின்ற இன்பவெளிக் கூடலும்/
இடைக்கிடையே அமிழ்கின்றனவே பிரிவுத் துயரினில்/

பொருளீட்டும் துடிப்பினில் பொன்மகன் காந்தனும்/
நகர்ந்திடுவான் நகர்களுக்கே நங்கையவளும் கரைந்திட/
கனவின் இதழ்களுக்குள் காளையவனைப் பூட்டிடவே/
நாடித்துடிப்பினில் ஏக்கம் நட்டே காத்திருப்பாள்/

பிரிவின் வலிக்குள்ளும் பிரிந்திடாக் காதல்/
பிரகாசம் கண்டே பிரிய தோழியும்/
மொழிகின்றாள் தலைவியிடம் பொலிவிற்கான காரணத்தை/
தழுவுகின்ற காதலவன் தவிப்பைப் போக்கிடும்/
வழிதனை வஞ்சியவள் கோர்க்கின்றாள் வார்த்தைகளில்/

நனவில் இன்பம் நல்கா காதலன்/
கனவில் பதிக்கின்றான் தன் முகமதை/
கனவின் உயிர்ப்பில் துளிர்க்கின்றதே உடலும்/
என்னுயிர் இவனென எழுதிடும் வாழ்வினை/
கனவது பகிர்கின்றதே இரவின் தரிசனத்தில்/
காண்டல் இல்லையெனில் மாண்டழியுமே உயிர்/
என்றுரைத்தாள் தலைவியும் தோழியும் புரிந்திடவே/

ஜன்ஸி கபூர் - 12.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!