கார்மேகப் பொழிவினைக் கவிபாடும் கவிமணி/
சேர்க்கின்றார் உள்ளமதில் மழைப்பொழிவின் மகிழ்வினை/
வியர்வையை ஒற்றியெடுக்கும் முத்துக்களின் பேரணியால்/
விளைகின்றதே விளைச்சலும் விசாலமான பூமிக்குள்/
காற்றினில் கலைந்தோடும் கார் மேகங்கள்/
பற்றிப் பிடிக்கின்றனவே வேர்களெனும் மின்னலைத்தான்/
வானும் குவித்த சாம்பர் மேடெல்லாம்/
கரைந்தே யூற்றுகின்றதே வறட்சியும் குறைந்திடவே/
மலர்க் கண்ணாய் மகிழ்ந்திடும் நீர்த்துளிதானே/
மனங் குளிர தடவுகின்றதே ஈரத்தை/
மழையும் வள்ளலாகி ஏரிக்குள் இறங்கிட/
அசையுதே நீரோட்டம் தாராக்களும் நீராடவே/
விரிந்திருக்கின்ற ஆகாயமும் உதிர்க்கின்ற ஊசிகள்/
துளைக்கின்றதோ நிழல்களை விலகுதே பொற்கதிர்கள்/
கள்ளமில்லாப் பெருமழையில் உள்ளமும் நனைகையில்/
வீட்டினுள் இருந்திடவே மனமது இசைந்திடுமோ/
மண்ணில் சிதறுகின்ற நுரைப் பூக்களை/
எண்ணாமல் எடுத்தே தேகம் சூட்டுகையிலே/
கண்ணோரமும் வியர்க்கின்றதே தேன்துளிகள் பட்டு/
இன்பத்தின் துளிர்ப்பில் கலக்கின்றதே மண்வாசமும்/
துடிக்கின்ற அலை நடுவே அசைந்திடும்/
துடுப்பினையும் விரட்டுதே விசாலக் காற்றும்/
இடுக்கண் கலைத்திடாமல் புயலும் மோதுகையில்/
புன்னகைக்குள் நசிகின்றதே கண்ணீரின் ஈரமும்/
நெஞ்சில் மோதுகின்ற மழைத் தோரணங்களை/
கொஞ்சி மகிழுதே வனத்தின் வண்டுகளே/
அஞ்சிடாமலே அணைக்கிறதே ஆற்றின் கரங்களும்/
பாய்ந்தோடுதே பவள மீன்களும் தாராளமாக/
வானீரம் சிந்தும் பசுமை நேசம்/
வருடுமே மண்ணையும் உள்ளமும் குளிர்ந்திடவே/
உயர்ந்த வானும் குவித்திடும் மழையும்/
குன்றாச் செல்வமே என்றும் எமக்கே/
ஜன்ஸி கபூர் - 24.11.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!