About Me

2021/04/13

உன்னிடம் மன்றாடுகின்றேன்

 

உன்னிடம் நானும் மன்றாடுகின்றேன் ஜானு

உடைத்து விடாதே மல்லிகைச் செடியினை

நிதமும் மல்லிகை மொட்டுக்களில் மணக்கின்றது 

உன் அழகான புன்னகையின் வாசம் 

உன் கள்ளமில்லா மனதின் பிம்பத்தில்

உயிர்க்கின்ற உயிர்ப்பூக்களை நானும் நேசிக்கின்றேன்


உன்னிடம் நானும் மன்றாடுகின்றேன் ஜானு

சுவரேறி என்னைச் சந்திக்க முயற்சிக்காதே

மதிலில் படர்ந்திருக்கின்ற பாசியின் பசுமைக்குள்

தெரிகின்றதே நம் உலராக் காதலும்

சூரிய ஒளியின் சுகத் தரிசிப்புக்களில்

பூரிக்கின்ற இயற்கையை நானும் நேசிக்கின்றேன்

உன்னைப் போல பாதுகாத்திடத் துடிக்கின்றேன்.


உன்னிடம் நானும் மன்றாடுகின்றேன் ஜானு

முற்றத்து தாமரைக் குளத்தின் நீரை

அவசரப்பட்டு வெளியே இறைத்து விடாதே

அழகிய குட்டிக் குளத்தின் சாம்பிராஜ்யத்தின்

அங்கித் தொடர்புகளில் நிழலாடுகின்றன நம்முறவுகள்

தளம்பும் நீருக்குள் தள்ளாடுகின்ற இலைகளை

நனைக்காத நீர்த்துளிக்குள் தெளிவாகத் தெரிகின்றது

உதட்டோரப் புன்னகையுடன் பிரகாசிக்கின்ற முகம்


உன்னிடம்   மன்றாடுகின்றேன் ஜானுக் குட்டி

உன் காலடிக்குள் பற்றையாகப் பூத்திருக்கின்ற 

தொட்டாச்சுருங்கிப் பூவினை நீயும் மிதிக்காதே 

தொட்டதும் சுருங்குகின்ற இலைகளுக்குள் காண்கின்றேன்

ஊடலால் முகம் சோர்கின்ற உன்னை


உன்னிடம் மன்றாடுகின்றேன் ஜானுக் குட்டி

மழைக்குள் நசிந்து சிதறுகின்ற மலரிதழ்களை

நீயும் மிதித்து மென்மையைச் சிதைக்காதே

உன் மென்மையான இதயத்தின் வருடலை

இழக்கின்ற பிரமைக்குள் தவிக்கின்றது மனதும் 

நம்மைப் பிரிகின்ற பெற்றோரின் கண்ணீராகி

என்னையும் நனைக்கின்றது அந்த ஈரம்

அஞ்சுகின்றேன் என் சகோதர்களும் உன்றன் 

உணர்வினைக் காயப்படுத்தி நம்மைப் பிரிப்பார்களோவென்றே


உன்னிடம் மன்றாடுகின்றேன் ஜானுக் குட்டி

வேலிக்குள் விளக்கேற்றும் ரோசாச் செடிகளை

என் நினைவாகத் தொட்டுப் பார்த்திடாதே

வெட்கத்தில் சிவக்கின்ற என் கன்னத்தை

நீயும் காணாமல் போய் விடுகின்றாய்

பக்கத்தில் விரிந்திருக்கின்ற முட்களைப்போல் பாதுகாக்கின்ற

பெற்றோரின் வெஞ்சினத்தில் நீயும் துன்பப்படுவாயென

அஞ்சுகின்றேன் நானும் உன்மீதான அன்பினால்


ஜன்ஸி கபூர் - 18.12.2020

 

Kesavadhas

ஜன்ஸி கபூர்

தனது தனித்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறார் கவிஞர் இக்கவிதையின் வாயிலாக!

மாதிரிக் கவிதைகளின் கருத்தோ எதிர்மறைக் கருத்தோ கூட கவிஞர்களின் கவிதைகளில் வரலாம்!

ஆனால் சொல்லும் வகையில் சொற்களில் வார்த்தைகளில் உவமங்களில் வர்ணனைகளில் படிமங்களில் சொல்லோவியமாக தரும் வகையில் தான் தனித்துவம் தெரியும்!

இந்த கவிஞர் கொடுக்கப் பட்டப் பொருள் மற்றும் கருத்திலிருந்து மாறுபடுவதில்லை!

ஆனால் அணுகும் விதத்தில் சொற்பிரயோகங்களிவ் படிமங்களில் வெற்றியை தனது வசமாக்கிக் கொள்ளும் வித்தை இவரிடமுளது!

கவிதைக்குள் போகலாம்!

ஜானு முறித்துவிடாதே ஜாஸ்மின் செடியை!

மல்லிகைச் செடியில் மணக்கிறதுஉன் புன்னகையின் வாசம்!

கள்ளமில்லா மனத்தின் பிம்பம் உயிர்க்கின்ற உயிர்ப்பூக்கள்

சூரிய ஒளியின் சுக தரிசுப்புகளில் பூரிக்கும் இயற்கையாக நானும் நேசிக்கிறேன்!

பாசியின் பசுமைக்குள் தெரிகிறது நமது உலராக்காதல்

முற்றத்து தாமரைக் குளத்து நீரை இறைக்காதே!

குட்டிக்குளம் அங்கித் தொடர்புகள் நிழலாடுகின்றன. நம்முறவும் தளும்பும் நீருக்குள் தள்ளாடும் இதயம் நனையாத நீர்த்துளிக்குள் தெரிகிறது!

தொட்டாச் சுருங்கி இலைகள் சுருங்குகையில் ஊடலில் சுருங்கும் உன்முகத்தை ஞாபகமூட்டுவதால் அப்பூக்களை மிதிக்காதே!

(தொடரும்)

 

Kesavadhas

 

ஜன்ஸி கபூர் தொடர்ச்சி


மழைக்குள் நசிந்து சிதறும் மலரிதழ்களை மிதித்து மென்மையைச் சிதைக்காதே!

மென்மையான இதயவருடலை இழக்கின்ற பிரமைக்குள் தவிக்கிறது மனம்!!

பெற்றோர்களின் கண்ணீரின் ஈரம் என்னை நனைக்கலாம்!

அதனால் எழும் சகோதர கோபம் நம்காதலைச் சிதைக்கலாம்!

ரோசாப்பூக்கள் சிதைந்தால நாணத்தால் சிவக்கும் என்கன்னங்களை நீ பாராய்!

என் பெற்றோரின் வெஞ்சினத்தால் நீயும் துன்புறுவாய்!

உன் காதலுக்காகவே அத்தனையும் சொல்கிறேன்!

காதலே பெரிதாகத் தெரிகிறது

இக்கவிதையில்!

சில வார்த்தை பிரயோகங்கள் பிரத்யேகமானவை!

சமூக ஒளியின் சுகதரிசிப்புகள் பூரிக்கின்ற இயற்கை

தளும்பும் நீருக்குள் தள்ளாடுகின்ற இலைகளை நனைக்காத நீர்த்துளிக்குள்

தெளிவாகத் தெரியும் உதட்டோரப் புன்னகை

இதயத்தின் வருடலை இழக்கின்ற பிரமைக்குள் தவிக்கின்ற மனது

இவைகளுக்காகவே தனியொரு சபாஷ் தரலாம்!

சாம்ராஜ்யம் சரிபார்க்கவும்!

அங்கிகள் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டது!

மொத்தத்தில் பிரமிப்பு!

வாழ்த்துகள்!

கவிஞர்/கவிதாயினி 

கவிதை வடித்தக் கவிஞர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

இவண் பைந்தமிழ்ப்பூம்புனல்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!