About Me

2021/04/14

காத்து நிற்கின்றேன்




மூடப்பட்ட அறை இருட்டின் முடிச்சு
இறுக்குகின்றது என் பத்திரப்படுத்தப்பட்ட மூச்சினை 
உடைகின்ற உணர்வுகளால் தடுமாறுகின்றேன் அச்சத்துக்குள்
என்னைச் சிறைப்படுத்தியிருக்கின்ற இயலாமையின் விரல்களை
நானும் விடுவதாக இல்லை பற்றுகின்றேன்

வெளியே மழை மண்ணைத் தோண்டுகின்றது
இடியின் குரல் துடிக்கின்றது அதிர்வுடன்
போர்வைக்குள் ஒளிந்து துரத்துகின்றேன் மின்னலையும்
நனையாமல் மனதையும் பத்திரப்படுத்துகின்றேன் ஆடைக்குள்

காற்று வாசலை மெல்லத் தட்டுகின்றது
தொற்றுக்களைக் கொட்டி விடுமோ சுவாசத்துக்குள்
சன்னல் துளைகளை மறைக்கின்றேன் அவசரமாக
முணுமுணுக்கின்றன உடம்பின் வியர்வைத்துளிகள் இருந்தும்
புழுதியையும் தும்மலையும் புறந்தள்ளுகின்ற திருப்தி

யார் யாரோ புத்தகங்களை எழுதுகிறார்கள்
அவற்றால் என் வாசிப்பறையும் நிரம்புகின்றது 
படித்துக் களைத்ததில் மங்கிய பார்வைக்குள்
எட்டிப் பார்க்கின்றது ஞானமற்ற அறிவு
வரிகளால் மெருகூட்டப்படாத சிந்தனை கண்டு
என் தலையணையும் ஏற்பதில்லை புத்தகங்களை

ஆசைக்குள் ஒதுங்கிக் கொண்ட மனது
காதலை மெல்லத் தொட்டுப் பார்க்கின்றது
நாடிய காதலிக்காக நாடித்துடிப்பும் அதிகமாகின்றது
ஆனாலும் மறைந்து கொள்கின்றேன் கதவுக்குள்
சாவித் துவாரத்தினுள் தெரிகின்றாள் அவளும்
அவளோடு உரசிச் செல்கின்ற அந்தத் துணையும் 
அடுத்தவர்களுக்காக என்னை அடக்கி அடக்கியே
சுமையொன்றை உயிருக்குள் இறக்கி வைக்கின்றேன்

ஓவ்வொரு நொடியும் பிழிகின்ற அவஸ்தைகள்
மரணத்துக்குள் பதுங்கப் பேரலையாகத் திரள்கின்றன
இருந்தும் சாவின் அனுபவங்களைப் பகிர்வதற்காக
இன்னுமொரு சாவுக்காகக் காத்திருக்கின்றேன் நானும்

ஜன்ஸி கபூர் - 21.11.2020

 
Kesavadhas
 
ஜன்ஸி கபூர் எந்தவொரு விளையாட்டையும் அதற்கென வழங்கப் பட்ட அரங்கில் அந்த விளையாட்டிற்குரிய விதிகளின் படி விளையாட வேண்டும்!!
இங்கு நவீன கவிதைதான் அரங்கு!
கொடுக்கப்பட்ட சான்று கவிதைதான் விளையாட்டு!
விதிகளின் படி தன்திறமையைக் காட்டி விளையாடுவது கவிஞரின் திறமை!
இதை எதற்கு சொல்கிறேன் எனில் அதைப் போலவே தன்தனித்தன்மை மாறாது கவிதை எழுதுவதில் இவர் வித்தகர்!
இந்த கவிதையும் விதிவிலக்கு அல்ல!
சான்றுக் கவிதைக் காட்டிய அச்சம் தயக்கம் துணிவின்மை
அதனால் எழும் வேதனை இவ்வுணர்வுகளை இக்கவிதையும் மிகத்துல்லியமாக வழியவழியக் காட்டுகிறது!
ஒவ்வொரு நொடியும்.... நானும்'
வரையுள்ள வரிகள் மனுஷ்யபுத்திரன் கவிதைவரிகளை ஞாபகப் படுத்துகிறது!
மனுஷ்ய புத்திரன் உலகளவில் கொண்டாடப்படும் நவீன கவிதை எழுத்தாளர்கள் வரிசையில் முன்னிருக்கைகளில் இருக்கும் கவிஞர்களில் ஒருவர்!
வாழ்த்துகள் கவிஞரே!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!