About Me

2021/04/12

காலத்தை வென்ற கணினி

'எண்ணும், எழுத்தும் கண்ணெணத் தகும்' என்பார்கள். எமது இன்றைய வாழ்வின் பிரதான அறிவுக் கண்ணாக கணினி விளங்குகின்றது. தகவல் தொழினுட்ப அறிவும் ஆற்றலும் நம் முன்னே விரித்து வைத்திருக்கின்ற சவால்களை நாம் வென்றெடுக்க கணினி இயக்கத்திற்கான அறிவும், அனுபவமும் தேவைப்படுகின்றது. கணினி அறிவற்றவர்களை இவ் அறிவியல் உலகம் நிராகரித்து விடுகின்றது என்றால் அது மிகையில்லை.

1642 ஆம் ஆண்டு பிளெஸ் பாஸ்கால் என்பவரால் சிறிய சிறிய எண்களைக் கூட்டுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கூட்டல் பொறியும், பின்னர் கொற்பிறீட் லைப்நிற்ஸ் வடிவமைத்த கல்குலேற்றரும், சாள்ஸ் பபேஜ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கருவியும் பல்வேறு சிந்தனைகளின் விரிகையினால் இன்றைய கணினி எனும் இயந்திரப் பொறியின் உருவாக்கத்திற்கு தளம் அமைத்துத் தந்துள்ளன.

கற்களை உராசி தீமூட்டி வாழப் பழகிய மனிதன், சொற்களை காற்றலைகளில் ஒலிகளாக்கி உலாவிட்ட மனிதன், எழுத்துக்களால் காகிதங்களை அலங்கரித்து வாழப் பழகிய மனிதன், இன்று தன் சிந்தனையால் அறிவைப் புரட்சி செய்ததன் பலனாக கணினி யுகத்தில் தம் சுவடுகளைப் பதித்துள்ளான்.

அன்றைய காலகட்டத்தில் விரல்களின் மொழியாக பேனாக்கள் காணப்பட்டன. ஆனால் இன்றோ விரல்களின் அசைவுகள் கணினி விசைப் பலகைகளுடனல்லவா ஒன்றித்து நிற்கின்றன. தொழினுட்ப வளர்ச்சியின் மூலப் புள்ளியாக இக்கணினியே காணப்படுகின்றது.

வணிகம், அறிவியல் தொழினுட்பம், தொலைத் தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு, விளையாட்டு, பொறியியல், வங்கி உள்ளிட்ட கணக்குத் துறை, பொழுதுபோக்கு போன்ற சகல துறைகளிலும் கணினி தனது சுவடுகளைப் பதித்துள்ளது.

பாடசாலைகளில் தகவல் தொழினுட்ப அறிவினைப் பாடங்களினூடாகப் புகுத்தி கற்பிக்க ஒவ்வொரு நாட்டு அரசும் தனது வரவு, செலவு திட்டத்தில் பல கோடி ரூபாக்களை ஒதுக்குகின்றது. எதிர்கால கல்விப் புலத்தின் சுவடாக இக்கணனியே காணப்படப் போகிறது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள கொவிட் 19 நோய் நிலைமைகளின்போது மாணவர்கள் வீடுகளில் இருந்தே கற்க நிகழ்நிலைக் கற்றல் கற்பித்தலை வழங்க இக்கணனியே உதவுகின்றது.

இன்றைய நவீன காலத்தில் கணினி உலகத்தையே சுருக்கி விட்டது எனலாம். உலகின் பல மூலைகளிலும் உள்ள மக்களை மின்னஞ்சல், இணையங்களினூடாக இக்கணினி சில விநாடிகளிலேயே இணைத்து விடுகின்றது. முகம் பார்த்து உரையாடவும், தமக்குத் தேவையான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இலகுவான பாதையாக மிளிர்கின்றது.

தொழினுட்ப சவால் நிறைந்த இவ்வுலக இன்றைய வாழ்வில் மனிதன் தன்னைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது. இந்நிலையில் தன் வீட்டைச் சூழ்ந்த நிகழ்வுகளைக் கண்காணிக்க கண்காணிப்பு கருவிகளைப் பொருத்தி அவற்றின் நிகழ்வுகளைக் கண்டறியவும் கணனி தேவைப்படுகின்றது.

உடலிலுள்ள நோய்கள் மற்றும் குறைகளைக் கண்டறியவும், அவற்றுக்கான சிகிச்சைகளைச் செய்யவும் கணனி உற்ற தோழனாக நமக்கு விளங்குகின்றது.

இவ்வாறாகவே அலுவலகப் பணிகளான நிர்வாக விடயங்கள், வரவு, செலவு போன்ற கணக்கு விடயங்களைக் கையாளவும், கணனி அறிவு பயன்படுத்தப்படுகின்றது. தகவல்களைத் திரட்ட சேமிக்க, பரிமாறிக் கொள்ளவென பல்துறைப் பரிமாணங் கொண்டு இக்கணனி பயன்படுகின்றது.

'கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் ' என்பார்கள். வாசிக்கின்ற நூலறிவின் ஆர்வம் குறைந்திருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் வழியாக நூல்களை வாசிக்கின்ற ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

கற்றவர் மாத்திரமல்ல, கல்லாதவர்களும் திறமையான பயிற்சிகளின் ஊடாக கணினிகளை இயக்கிப் பயன்களைப் பெறுகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் நாமறிந்த உண்மையாகும்.

இருந்தும் நன்மைக்குள் ஒளிந்திருக்கின்ற தீமைகள் நம்மை அணுகாமல் நாம் கணனியைப் பயன்படுத்துவோமானால் காலம் நமக்கு வசந்தமாக மாறி நிற்கும். காலத்தை வென்று நிற்கின்ற இக்கணினி பற்றிய ஆற்றலினால் மனிதன் தன்முன்னால் எழுகின்ற பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முறியடிக்கின்ற மனோபலம் உருவாகின்றது என்பது நிதர்சனமே.

கணினி, காலத்தை வென்று நமக்கான உடைமையாக நம் கரங்களில் தவழ்கின்றது என்பதே யதார்த்தமாகும்.

ஜன்ஸி கபூர் - 12.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!